ஒட்டுமொத்த குடும்பம் மீதும் வழக்குகள்; கோவில் கோவிலாக சுற்றும் ரேவண்ணா
ஒட்டுமொத்த குடும்பம் மீதும் வழக்குகள்; கோவில் கோவிலாக சுற்றும் ரேவண்ணா
ADDED : ஜூலை 03, 2024 10:31 PM

பெங்களூரு : தொடர்ந்து பிரச்னைகளில் சிக்கி, திணறும் முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, கஷ்டத்தை போக்கும்படி கோவில், கோவிலாக சுற்றுகிறார். தற்போது திருப்பதி, ஸ்ரீரங்கம் கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டு, நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினர், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ளவர்கள். குறிப்பாக தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவுக்கு, தெய்வ பக்தி அதிகம். தன் பாக்கெட்டில் எப்போதும் எலுமிச்சை பழம் வைத்திருப்பார். இது குறித்து, சட்டசபையில் சுவாரஸ்யமான சர்ச்சை நடந்தது உண்டு.
ஒவ்வொரு விஷயத்தையும், ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று அதன்படியே செய்வார். நல்ல நாள், நேரம் பார்த்து எதையும் செய்வார். ரேவண்ணா குடும்பத்தினருக்கு, நடப்பாண்டு பல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியாகி, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வழக்கில், சாட்சிகளை கலைக்க பணிப்பெண்ணை கடத்திய வழக்கில், ரேவண்ணா கைதானார். அதன்பின் ஜாமினில் வெளியே வந்தார். அவரது மனைவி பவானி, தலைமறைவாக இருந்து முன்ஜாமின் பெற்ற பின், சரணடைந்தார்.
இந்நிலையில், ரேவண்ணாவின் மற்றொரு மகன் சூரஜ், கட்சி தொண்டர் ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார். இப்படி, ஒட்டுமொத்த குடும்பமும் வழக்கில் சிக்கியதால், ரேவண்ணா மனம் நொந்துள்ளார். கஷ்டத்தில் இருந்து காப்பாற்றும்படி, கோவில்களை சுற்றி வருகிறார்.
கர்நாடகாவின் தர்மஸ்தலா உட்பட பல கோவில்களில் தரிசனம் செய்த ரேவண்ணா தற்போது, ஆந்திராவின் திருப்பதி, தமிழகத்தின் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஆனால், அவர் நிபந்தனை ஜாமினில் இருப்பதால், ஊரை விட்டு செல்ல கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், திருப்பதி, திருச்சிக்கு செல்ல அனுமதி கோரி, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து ரேவண்ணா கூறியதாவது:
நான் வயதானவன். என் மனம் சஞ்சலப்படும் போது, கோவில்களுக்கு சென்று வழிபட்டு, மனதை அமைதிப்படுத்துவது வழக்கம். என் மொத்த குடும்பமும், தற்போது நெருக்கடியில் உள்ளது. கஷ்டமான நாட்களை சந்திக்கிறது.
நான் ஜாமினில் இருப்பதால், திருப்பதி, திருச்சி கோவில்களுக்கு செல்ல முடியவில்லை. நான் வெளி மாநிலங்களின் கோவில்களுக்கு செல்ல, அனுமதி கோரி மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகனுக்கு ஆறுதல்
பிரஜ்வல் ரேவண்ணாவை சந்திக்க மாட்டேன் என, நேற்று முன்தினம் கூறிய ரேவண்ணா, நேற்று பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு சென்று, மகன் பிரஜ்வலை பார்த்து ஆறுதல் கூறினார். அவர் நல்ல நேரம் கணித்து, மகனை பார்க்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.