ADDED : மார் 25, 2024 06:34 AM
பெங்களூரு: தேர்தலில் செலவு செய்ய பணம் இன்றி, காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலர் கவலையில் உள்ளனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உதவுவரா என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், ஏப்ரல் 26, மே 7ம் தேதிகளில், இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் 24 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது.
இதில் ஐந்து பேர் அமைச்சர்களின் வாரிசுகள். கலபுரகி வேட்பாளர் ராதாகிருஷ்ணா, மல்லிகார்ஜுன கார்கேயின் மருமகன் ஆவார். இவர்கள் அனைவரும் பணக்காரர்கள்.
ஆனால் மைசூரு லட்சுமண், விஜயபுராவின் ராஜு அல்குர், ஹாவேரியின் ஆனந்த்சாமி கடேவர்மத், துமகூரின் முத்தஹனுமே கவுடா, ஹாசனின் ஸ்ரேயஷ் படேல், சித்ரதுர்காவின் சந்திரப்பா, தார்வாடின் வினோத் அசூட்டி, தட்சிண கன்னடாவின் பத்மராஜ் ஆகியோர், பொருளாதார ரீதியாக பலம் இல்லாதவர்கள்.
இன்றைய காலகட்ட தேர்தலில், பணத்தை வாரி இறைத்தால் தான், வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக பலம் இல்லாத காங்கிரஸ் வேட்பாளர்கள், கையை பிசைய ஆரம்பித்து உள்ளனர்.
வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, அமைச்சர்கள் வசம் உள்ளது. இதனால் வேட்பாளர்கள் அமைச்சர்கள், பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள எம்.எல்.ஏ.,க்களை நம்பி உள்ளனர். அவர்கள் ஒருவேளை கைவிட்டால், வட்டிக்கு கடன் வாங்கவும் தயாராகி வருகின்றனர்.

