ADDED : ஆக 08, 2024 10:16 PM
பெங்களூரு : மோசடி வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை, ஏட்டு ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து பிடித்தார்.
துமகூரு, கொரட்டகரேவில் வசிக்கும் மூதாட்டி ஒருவருக்கு, மஞ்சுநாத், 28 என்பவர் அறிமுகமானார். சமீபத்தில் மூதாட்டிக்கு பென்ஷன் வாங்கி தருவதாக கூறி, தன்னுடன் அழைத்து சென்றார். தங்க நகை அணிந்திருந்தால் பென்ஷன் கிடைக்காது என, கூறி நகையை கழற்ற வைத்தார்.
மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பிவிட்டு, நகையுடன் கம்பி நீட்டினார். இது தொடர்பாக, மூதாட்டி அளித்த புகாரின்படி, கொரட்டகெரே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். மஞ்சுநாத் ஏழு பேரை இதே போன்று ஏமாற்றி, நகைகளுடன் ஓடியது விசாரணையில் தெரிந்ததனர். இவரை தொடர்ந்து தேடி வந்தனர்.
கொரட்டகரேவில் இருந்து, பெங்களூரு வரையிலானகண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மஞ்சுநாத் பெங்களூரில் இருப்பதை அறிந்து, அவரை பிடிக்க நகருக்கு வந்தனர்.
அவரை தேடிய போது, பெங்களூரின், சதாசிவநகர் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பாக பைக்கில் செல்வது தெரிந்தது. இதையறிந்து கொரட்டகெரே போலீசார், நேற்று முன்தினம் மதியம் அங்கு சென்றனர். மஞ்சநாத் பைக்கில் வருவதை கண்டு, ஏட்டு தொட்டலிங்கையா பிடிக்க சென்றார். ஆனால், மஞ்சுநாத் பைக்கை வேகமாக ஓட்டி சென்றார்.
ஆனால் தொட்டலிங்கையா, மஞ்சுநாத்தின் காலை கெட்டியாக பிடித்து கொண்டார். சிறிது தொலைவு பைக்குடன் இழுத்து சென்றும், காலை விடவில்லை. அதன்பின் பொது மக்கள், போக்குவரத்து போலீசாரின் உதவியுடன், மஞ்சுநாத்தை பிடித்தனர். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.