ADDED : ஜூலை 09, 2024 04:02 AM

உத்தரகன்னடா : குடிபோதையில் கடலில் இறங்கிய இருவர், 'லைப் கார்டு'களால் நன்றாக, 'கவனிக்க'ப்பட்டனர்.
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. கடலோர மாவட்டமான உத்தரகன்னடாவிலும், மழை வெளுத்து வாங்குகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து கடற்கரைகளிலும் சுற்றுலா பயணியருக்கு தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கார்வாரின் தாகூர் கடற்கரையிலும் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடல் சீற்றமடைந்து உள்ளதால், யாரையும் அருகில் செல்ல விடாமல், 'லைப் கார்டுகள்' கண்காணிக்கின்றனர்.
இரண்டு நபர்கள், நேற்று காலை குடிபோதையில் கடற்கரைக்கு வந்தனர். கடலில் இறங்க முற்பட்டனர். லைப் கார்டுகள் கூச்சலிட்டு எச்சரித்தும், அவர்கள் கேட்கவில்லை. கடலில் இறங்கினர். இதனால் எரிச்சல் அடைந்த லைப் கார்டுகள், போலீசாரின் உதவியுடன், இருவரையும் கரைக்கு இழுத்து வந்து, அடித்து, உதைத்து புத்திமதி கூறி அனுப்பினர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
மழைக்காலத்தில் கடல் சீற்றமடையும்; சுழற்காற்று வீசும். இத்தகைய சந்தர்ப்பங்களில், கடற்கரைகளுக்கு செல்வதை சுற்றுலா பயணியர் தவிர்ப்பது நல்லது. கடலில் ராட்சத அலைகள் வீசுகின்றன. கரையில் நிற்கும்போது, சட்டென அலைகள் இழுத்துச் செல்லும் அபாயம் உள்ளது.
ஆனால், பலரும் அபாயத்தை உணர்வது இல்லை. கடலில் இறங்கி சாகசம் செய்ய முற்படுகின்றனர். இவர்களை கண்காணிக்க லைப் கார்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.