சுற்றுலா பயணியர் வராததால் 'காவிரி கலா கேலரி'க்கு பூட்டு
சுற்றுலா பயணியர் வராததால் 'காவிரி கலா கேலரி'க்கு பூட்டு
ADDED : ஜூன் 30, 2024 10:45 PM

மைசூரு: தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தரும் மைசூரு நகரில், பிரபலமான அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது.
மைசூரு நகரின், இதய பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தரும் அம்பா விலாஸ் அரண்மனை, மிருகக்காட்சி சாலையில் இருந்து கூப்பிடு தொலைவில், அருங்காட்சியகம் உள்ளது.
கர்நாடக சுற்றுலாத்துறை, மைசூரில் 3.5 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் கட்ட, அருங்காட்சியக ஆணையத்துக்கு அனுமதி அளித்தது.
நிதியுதவியும் வழங்கியது. 2016ல் அருங்காட்சியகம் கட்டும் பணிகள் துவங்கியது. அருங்காட்சியக ஆணையத்தின் அலட்சியத்தால், பணிகள் தாமதமானது.
அதன்பின் ஆணைய தலைவராக பொறுப்பேற்ற ஹேமந்த் குமார் கவுடா, பணிகளை விரைந்து முடிக்க வசதிகள் செய்தார். 2022 செப்டம்பரில், அன்றைய மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோமசேகர், 'காவேரி கலா கேலரி'யை திறந்து வைத்தார்.
சுற்றுலா பயணியரை ஈர்க்கும் நோக்கில், 'அம்யூஸ்மென்ட் பார்க், புட் கோர்ட்' அமைப்பது உட்பட, பல திட்டங்களை வகுத்தார். 2023 தசரா பொருட்காட்சி வரை, சுற்றுலா பயணியர் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் மூடப்பட்டது. சுற்றுலா பயணியர் வருகை தராததால், அருங்காட்சியகம் மூடப்பட்டது.
காவேரி கலா கேலரியில் நுழைந்ததும், நீர் பாய்ச்சும் காவிரி விக்ரகம், சோமநாதபுராவின், சென்னகேசவ கோவில் மாதிரி, 3டி ஸ்க்ரீன் ப்ளே உட்பட பல்வேறு விஷயங்கள் உள்ளன.
மற்றொரு பக்கம் செயற்கை வனம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தால், செயற்கையான புலி, சிங்கம் கர்ஜனை கேட்கும். உண்மையான வனத்தில் நுழைந்தது போன்ற அனுபவம் ஏற்படும்.
ஆனால் சரியானபடி விளம்பரம் செய்யாததால், அருங்காட்சியகத்துக்கு சுற்றுலா பயணியர் அவ்வளவாக வருவதில்லை. எனவே அருங்காட்சியகம், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.