வெளிநாட்டு ஆயுதங்கள் பறிமுதல் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ., அதிரடி
வெளிநாட்டு ஆயுதங்கள் பறிமுதல் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ., அதிரடி
ADDED : ஏப் 27, 2024 01:04 AM
கோல்கட்டா
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ., நடத்திய சோதனையில், வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி.
ரேஷன் வினியோக மோசடி வழக்கு தொடர்பாக, இந்த பகுதியின் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கிடம் விசாரிக்க, ஜன., 5ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, ஷாஜஹான் ஷேக் தலைமறைவானார். இந்த சம்பவத்திற்கு பின் அவர் மீது நில அபகரிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அதிர்ச்சிகர புகார்கள் வெளிவந்தன. இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்தவர், பிப்., 29ல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் ஷாஜஹான் ஷேக் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.,க்கு மாற்றி, கோல்கட்டா நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் ரகசியமாக புகார் அளிக்க மொபைல் எண்களையும், மின்னஞ்சல் முகவரியையும் சி.பி.ஐ., அறிவித்தது. அதில், முதல் நாளிலேயே 50க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்கள் குவிந்தன.
இந்நிலையில், நேற்று ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து, மாநில அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

