ADDED : ஏப் 13, 2024 01:59 AM

புதுடில்லி:டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கானா எம்.எல்.சி.,கவிதாவிடம் 15ம் தேதி வரை விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.
விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட் டோரை கைது செய்தது.
இந்த வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில எம்.எல்.சியுமான கவிதா, 46,வை, சி.பி.ஐ., சமீபத்தில் கைது செய்தது.
இதையடுத்து, கவிதாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
வரும் 15ம் தேதி வரை கவிதாவிடம் விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அனுமதி அளித்து நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.
ஏற்கனவே, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் கவிதா அடைக்கப்பட்டுள்ளார்.
