வாரிசுகளுக்கு அரசு பதவி சத்தீஸ்கரில் சி.பி.ஐ., ரெய்டு
வாரிசுகளுக்கு அரசு பதவி சத்தீஸ்கரில் சி.பி.ஐ., ரெய்டு
UPDATED : ஆக 08, 2024 02:07 AM
ADDED : ஆக 08, 2024 02:05 AM

புதுடில்லி, துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கு சத்தீஸ்கர் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் முறைகேடான முறையில் தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகாரில், சி.பி.ஐ., நேற்று 15 இடங்களில் சோதனை நடத்தியது.
சத்தீஸ்கர் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2022ல் துணை கலெக்டர், டி.எஸ்.பி., மாவட்ட கலால் அதிகாரி உள்ளிட்ட முக்கிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியது. இதன் முடிவுகள் 2023ல் வெளியானது.
அதில் தகுதியற்ற நபர்கள் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., சத்தீஸ்கர் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் தமன் சிங் சோன்வானி, முன்னாள் செயலர் ஜீவன் கிஷோர் துருவ் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோர் தங்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற்று மெரிட் பட்டியலில் இடம்பிடிக்க உதவியதை கண்டுபிடித்தது.
சத்தீஸ்கர் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் தமன் சிங்கின் மகன், மருமகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் மகன் உட்பட 16 பேர் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக சி.பி.ஐ., பட்டியலிட்டுள்ளது.
நேற்று இவர்கள் தொடர்புடைய 15 இடங்களில் சி.பி.ஐ.,யினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.