வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு
வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு
ADDED : ஆக 08, 2024 05:54 AM
பெங்களூரு: கர்நாடக அரசின் பழங்குடியினர் நல துறைக்கு உட்பட்டது வால்மீகி மேம்பாட்டு ஆணையம். இந்த ஆணையம் எஸ்.டி., சமூக மக்களுக்கு நல திட்டங்கள் செய்வதற்கு உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு அரசு 187 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இதில் 94 கோடி ரூபாயை முறைகேடு செய்ததாக, முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, பெங்களூரு எம்.ஜி., ரோட்டில் உள்ள யூனியன் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 12 பேர், கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாநில காங்., அரசு ஒப்படைத்து உள்ளது.
இந்நிலையில் முறைகேடு வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க, காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிட கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் யூனியன் வங்கி சார்பில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா நேற்று விசாரித்தார்.
யூனியன் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல் வெங்கடரமணி வாதாடுகையில், ''ஒரு வங்கியில் இருந்து வேறு வங்கிக் கணக்கிற்கு 50 கோடி ரூபாய்க்கு மேல், சட்டவிரோதமாக பணம் மாற்றப்பட்டு இருந்தால், அதுபற்றி சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும். வங்கி தொடர்பான வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அதிகாரம் உள்ளது. வங்கி ஊழியர்களை தவிர வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் விசாரிக்கலாம். இதனால் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில், 'வழக்கு விசாரணையை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுப்பது, மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. எதிர்தரப்பு மனுவுக்கு ஒரு வாரத்தில் ஆட்சேபனை மனு செய்வோம்' என்றனர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எஸ்.ஐ.டி., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, ஆணைய தலைவர் பசனகவுடா தத்தல் பெயர்கள் இல்லை.