'ரேவ் பார்ட்டி' வழக்கில் 8 பேருக்கு சி.சி.பி., சம்மன்
'ரேவ் பார்ட்டி' வழக்கில் 8 பேருக்கு சி.சி.பி., சம்மன்
ADDED : மே 29, 2024 09:17 PM

பெங்களூரு: பண்ணை வீட்டில் 'ரேவ் பார்ட்டி' நடத்திய வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, தெலுங்கு நடிகை ஹேமா உட்பட, எட்டு பேருக்கு இரண்டாவது முறையாக, சி.சி.பி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டி அருகில் உள்ள, 'ஜி.ஆர்., பார்ம் ஹவுஸ்' என்ற பண்ணை வீட்டில், ஹைதராபாத்தைச் சேர்ந்த வாசு என்பவர், தன் பிறந்தநாளை ஒட்டி சில நாட்களுக்கு முன்பு, பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதிகாலை வரை பார்ட்டி தொடர்ந்தது. தகவல் கிடைத்து அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
பார்ட்டியில் தெலுங்கு நடிகை ஹேமா, நடிகர், நடிகையர், அரசியல்வாதிகளின் பிள்ளைகள், மாடல்கள் பங்கேற்றிருந்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ரேவ் பார்ட்டியில் இருந்த 103 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. நடிகை ஹேமா உட்பட, 86 பேரின் அறிக்கை வந்துள்ளது.
இவர்கள் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
பார்ட்டி தொடர்பாக விசாரணை நடத்தும் சி.சி.பி., போலீசார், மே 27ல் விசாரணைக்கு ஆஜராகும்படி, ஹேமா உட்பட, எட்டு பேருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் யாரும் ஆஜராகவில்லை. உடல் நிலையை காரணம் காண்பித்து, ஹேமா அவகாசம் கேட்டுள்ளார்.
ஜூன் 1ல் விசாரணைக்கு ஆஜராகும்படி, இரண்டாவது முறையாக இவர்களுக்கு சி.சி.பி., சம்மன் அனுப்பியுள்ளது.
இவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதால், கைதாகவும் வாய்ப்புள்ளது. ஆனால் நடிகை ஹேமாவை கைது செய்ய கூடாது என, ஆந்திராவின் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள், சி.சி.பி., போலீசாருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.