தண்டவாளத்தில் சிமென்ட் பலகை ராஜஸ்தானில் தப்பியது சரக்கு ரயில் 40 நாட்களில் 18 சதித்திட்டங்கள்
தண்டவாளத்தில் சிமென்ட் பலகை ராஜஸ்தானில் தப்பியது சரக்கு ரயில் 40 நாட்களில் 18 சதித்திட்டங்கள்
ADDED : செப் 11, 2024 01:40 AM

ஜெய்ப்பூர், உத்தர பிரதேசத்தின் கான்பூரில், நேற்று முன்தினம் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல் குண்டுகள், தீப்பெட்டிகளை மர்ம நபர்கள் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் சரக்கு ரயிலை கவிழ்க்க இதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அஜ்மீர் மாவட்டத்தில் சரக்கு ரயில்களுக்கான பிரத்யேக பாதை உள்ளது.
அந்த வழித்தடத்தில் கடந்த 8ம் தேதி இரவு சரக்குகளை ஏற்றிச் சென்ற ரயில் சாராதானா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட் பலகை மீது மோதியது.
இதுகுறித்து சரக்கு ரயிலின் ஓட்டுனர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அங்கு இரண்டு சிமென்ட் பலகைகள் ரயில் மோதி உடைந்து கிடந்தன. ஒவ்வொன்றும் 70 கிலோ எடை உடையவை என போலீசார் தெரிவித்தனர். ராஜஸ்தான் அரசு மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் செப்., 8 வரையிலான காலத்தில் ரயிலை கவிழ்க்கும் வகையில் நாடு முழுதும் 18 சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில் ஏழு சம்பவங்கள் உத்தர பிரதேசத்திலும், மற்றவை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 5ல் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டம், லால்கோபால்கஞ்ச் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தின் மீது சிலிண்டர் மற்றும் சைக்கிளை வைத்து, அதன் மீது ரயில் மோதுவதை வீடியோ எடுத்து யு-டியூபில் பதிவேற்றினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல உ.பி.,யின் கான்பூர் நகர் மாவட்டம், கோவிந்த்பூர் ரயில் நிலையம் அருகே ஆகஸ்ட் 17ல் தண்டவாளத்தின் மீது, 3 அடி நீள பழைய இரும்பு தண்டவாள துண்டு வைக்கப்பட்டிருந்தது.
அதன் மீது சபர்மதி எக்ஸ்பிரஸ் மோதி தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கியது.
உ.பி.,யின் பரூக்காபாத் மாவட்டம் கயம்கஞ்ச் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 4 அடி நீளம், ஒரு அடி அகலத்தில் மரக்கட்டை வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த கஸ்கஞ்ச் - பரூக்காபாத் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தினார்.
தொடர்ச்சியான இதுபோன்ற சம்பவங்களால், இதன் பின்னணியில் பயங்கரவாதிகளின் நாசவேலை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.