காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசனை
காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசனை
ADDED : ஆக 20, 2024 02:44 AM

புதுடில்லி:காப்பீட்டுத் துறையில், அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு துறைகளில், அன்னிய முதலீடுகளை ஈர்க்க, மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், தற்போது காப்பீட்டுத் துறையில், அன்னிய நேரடி முதலீடு 74 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனை 100 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், அவ்வாறு 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் பட்சத்தில், அத்தகைய காப்பீட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர் ஒருவரை நியமனம் செய்வது உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் ஏற்கனவே காப்பீட்டு துறையில் முதலீடு செய்துள்ளன. காப்பீட்டுத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டை 100 சதவீதம் அனுமதிக்க வேண்டிய சரியான தருணம் இது.
பல்வேறு அன்னிய நிறுவனங்கள், இந்திய காப்பீட்டுத் துறையில், முதலீடு செய்ய தயாராக உள்ளன. அன்னிய நேரடி முதலீட்டுக்கான அளவை அதிகரிப்பது, காப்பீட்டுத் துறையின் நீண்டகால மூலதன வணிகத்திற்கு பயனளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

