UPDATED : ஜூன் 27, 2024 04:22 AM
ADDED : ஜூன் 27, 2024 12:02 AM

புதுடில்லி: நம் விமானப் படைக்கு தேவையான சிறிய ரக கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்க, 'ஸ்பேஸ்பிக்சல் டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது, 'சிறந்த பாதுகாப்புக்கான கண்டுபிடிப்புகள்' என்ற பெயரில் ராணுவ அமைச்சகம் முன்னெடுத்துள்ள முயற்சியில் கையெழுத்தாகியுள்ள 350வது ஒப்பந்தம்.
பூமியின் நிலப்பரப்பை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்பிக்சல் நிறுவனம் தயாரித்து வருகிறது. விமானப் படையின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்நிறுவனம் இந்த செயற்கைக்கோளை வடிவமைத்து தயாரிக்க உள்ளது.
இந்த சிறிய ரக செயற்கைக்கோளில், மேகங்கள், புகை, பனி, மழை மற்றும் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்டறியும் ரேடார்கள் மற்றும் கருவிகளை பொருத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் 150 கிலோ எடை வரை இந்த செயற்கைக்கோள் சுமந்து செல்லும்.