பத்ரா மேலணை திட்ட செலவு அறிக்கை கேட்கும் மத்திய அரசு
பத்ரா மேலணை திட்ட செலவு அறிக்கை கேட்கும் மத்திய அரசு
ADDED : மார் 04, 2025 08:59 PM
பெங்களூரு : கர்நாடகாவின் மத்திய பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி செய்யும் பத்ரா மேலணை திட்டத்துக்கு, இதுவரை செய்துள்ள செலவுகள் குறித்து, மத்திய ஜல்சக்தி துறை, கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.
கர்நாடகாவின் மத்திய பகுதியில் உள்ள தாவணகெரே, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, துமகூரு மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்ய, பத்ரா மேலணை திட்டம் வகுக்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி, துங்கபத்ரா ஆற்றில் இருந்து, 17.40 டி.எம்.சி., தண்ணீர், பத்ரா அணையில் இருந்து 12.50 டி.எம்.சி., தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
துங்கபத்ரா ஆற்றில் இருந்து 17.40 டி.எம்.சி., தண்ணீரை இரண்டு கட்டங்களில் லிப்ட் செய்து, பத்ரா அணையில் பாய்ச்சப்படும். அங்கிருந்து 29.90 டி.எம்.சி., தண்ணீரை லிப்ட் செய்து, அஜ்ஜம்புரா சுரங்கதா வரை கொண்டு செல்லப்படும். அதன்பின் சித்ரதுர்கா கிளை கால்வாய், துமகூரு கிளை கால்வாய்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்.
பத்ரா மேலணை திட்டத்துக்கு, 21,473 கோடி ரூபாய் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டது. மாநில அரசு 10,100 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
மத்திய அரசு 2023 பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் அறிவித்தது. ஆனால் இதுவரை நிதியை வழங்கவில்லை.
திட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட நிதியை வழங்கும்படி, ஆகஸ்ட்டில் கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்தது. சமீபத்தில் கடிதம் எழுதியது.
மத்திய ஜல்சக்தி துறை, பத்ரா மேலணை திட்டத்துக்கு இதுவரை செய்துள்ள செலவுகள் குறித்து, விரிவான தகவல் தெரிவிக்கும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.