மசூத் அசார் மீது கடும் நடவடிக்கை; பாக்.,கிற்கு மத்திய அரசு வலியுறுத்தல்
மசூத் அசார் மீது கடும் நடவடிக்கை; பாக்.,கிற்கு மத்திய அரசு வலியுறுத்தல்
ADDED : டிச 07, 2024 05:12 AM

புதுடில்லி : பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்படும் பயங்கரவாதி மசூத் அசார் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
கடந்த 2001ல் நம் பார்லிமென்ட் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008ல் நடந்த மும்பை தாக்குதல் ஆகியவற்றில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவரை தேடப்படும் குற்றவாளியாக நம் அரசு அறிவித்தது. இவர், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் மறைந்திருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி வந்தது. இதை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பகவல்பூர் பகுதியில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மசூத் அசார் பேசியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து நம் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “மசூத் அசார், பாகிஸ்தானில் இல்லை என நீண்டகாலமாக அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. ஆனால், அவர் பாகிஸ்தானில் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மை எனில், இது அந்நாட்டின் போலித்தனத்தை அம்பலப்படுத்தும். எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்புள்ளது. அவரை சட்டத்தின் முன் நிறுத்தி, பாகிஸ்தான் அரசு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.