ADDED : ஜூலை 07, 2024 02:33 AM

புதுடில்லி : சந்தை நிலவரத்தை பொறுத்து, 'டிராய்' ஒப்புதலுடன் தான் மொபைல் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உலகளவில், இப்போதும் மிகவும் குறைவான கட்டணமே நம் நா ட்டில் உள்ளது என, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
மொபைல் சேவை வழங்கும் மூன்று தனியார் நிறுவனங்களான, 'ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா' ஆகியவை தங்களுடைய கட்டணத்தை சமீபத்தில் உயர்த்தின. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தன்னிச்சையாக இந்த நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதை மத்திய அரசு ஏன் கட்டுப்படுத்தவில்லை என, கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள், டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. சந்தை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அதே நேரத்தில் பயனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணங்கள் நிர்ணயிப்பதை டிராய் கண்காணித்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் சேவை கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. மேலும், '5ஜி, 6ஜி' என பல புதியதொழில்நுட்ப வசதிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான செலவுகளை ஈடுசெய்ய, கட்டணங்களை உயர்த்த நிறுவனங்கள் கோரின.
அதை ஆய்வு செய்து, டிராய் அளித்த ஒப்புதலின்படியே, கட்டண உயர்வை அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த மூன்று தனியார் நிறுவனங்கள் மற்றும் ஒரு பொதுத் துறை நிறுவனம் ஆகியவை, நம் நாட்டில் மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. இவை, உலகிலேயே இந்தியாவில் தான் மிகவும் குறைவான கட்டணம் இருப்பதை உறுதி செய்து வருகின்றன. ஆனால், கட்டண உயர்வு தொடர்பாக, பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.