'விக் ஷித் பாரத்' செய்தி அனுப்புவதை நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவு
'விக் ஷித் பாரத்' செய்தி அனுப்புவதை நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவு
UPDATED : மார் 22, 2024 02:36 AM
ADDED : மார் 22, 2024 02:34 AM

மத்திய அரசு மேற்கொண்ட பணிகள் குறித்து விளக்கும் வகையிலான, 'விக் ஷித் பாரத்' எனப்படும் வளர்ந்த பாரதம் என்ற பெயரில், 'வாட்ஸாப்' பயனாளிகளுக்கு அனுப்பும் செய்திகளை உடனடியாக நிறுத்தும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
விக் ஷித் பாரத் எனப்படும் வளர்ந்த பாரதம் என்ற பெயரில் மத்திய அரசு, வாட்ஸாப் பயனாளி களுக்கு செய்திகளை அனுப்பி வந்தது.
இதில், பிரதமர் மோடியின் படத்துடன் கூடிய, அவர் எழுதியதாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், கடந்த 10 ஆண்டு களில் மத்திய அரசு மேற்கொண்ட பணிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. மேலும் வளர்ந்த பாரதம் இலக்கை எட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
லோக்சபாவுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த செய்திகள் தொடர்ந்து அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இது போன்ற செய்திகளை அனுப்புவது, அதை மீறுவதாக அமையும்.
அதனால், உடனடியாக இந்த செய்திகளை அனுப்புவதை நிறுத்த வேண்டும். இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், 'தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியாவதற்கு முன் அந்த செய்திகள் அனுப்பப்பட்டன.
'சில தொழில்நுட்ப காரணங்களால், அவை பயனாளிகளுக்கு தாமத மாக சென்றுள்ளன. மற்ற படி அவை தொடர்ந்து அனுப்பப்படவில்லை' என, கூறப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

