கெஜ்ரிவாலை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க மத்திய அரசு முயற்சிக்கிறது
கெஜ்ரிவாலை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க மத்திய அரசு முயற்சிக்கிறது
ADDED : செப் 06, 2024 01:49 AM

புதுடில்லி, : டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. அரசின் மதுபான கொள்கை, 2021 - 22ல் திருத்தப்பட்டது.
இதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அமலாக்கத் துறையும் இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக விசாரித்து வருகிறது.
அமலாக்கத் துறையால், கடந்த மார்ச் 21ல் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஜூன் 26ல் சி.பி.ஐ., வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத் துறை வழக்கில், ஜூலை 12ம் தேதி ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, அதிக நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுபான ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமின் கேட்டும், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஜாமின் வழங்க மறுத்து, டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சி.பி.ஐ., சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டனர்.
அபிஷேக் சிங்வி வாதிட்டதாவது:
அமலாக்கத் துறை வழக்கில் ஜாமின் கிடைத்த நிலையில், கெஜ்ரிவால் சிறையிலேயே இருக்கும் நோக்கத்துடன், 'இன்சூரன்ஸ்' கைது நடவடிக்கையை சி.பி.ஐ., மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முன்னதாகவே நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை.
அரசியலமைப்பு சட்டப் பதவியில் உள்ளதால், அவர் தப்பி ஓட மாட்டார். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதனால், இவருக்கும் ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
இருதரப்பு விவாதங்களுக்குப் பின், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை அமர்வு ஒத்தி வைத்தது.