மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்கீடு: காலி சொம்புடன் காங்., போராட்டம்
மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்கீடு: காலி சொம்புடன் காங்., போராட்டம்
ADDED : ஏப் 29, 2024 01:53 AM

பெங்களூரு : கர்நாடகாவில், வறட்சிக்கு குறைவான நிவாரண நிதி அறிவித்ததாக, மத்திய அரசை கண்டித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் காலி சொம்புடன் நேற்று போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால், கடும் வறட்சி நிலவுகிறது. நீர் நிலைகள் வற்றி உள்ளன. குடிப்பதற்கு தண்ணீரின்றி மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள, 18,172 கோடி ரூபாய் நிதி வழங்கும்படி மத்திய அரசுக்கு, மாநில காங்கிரஸ் அரசு கடிதம் எழுதியது.
ஆனால், மத்திய அரசு தாமதப்படுத்தியதால், நிதியை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி, கர்நாடக அரசு, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
இதன் அடிப்படையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வறட்சி நிவாரணமாக, 3,454.22 கோடி ரூபாயை, கர்நாடகாவுக்கு வழங்குவதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், கேட்டதை விட மிகவும் குறைவாக வழங்கி உள்ளதாக கூறி, மத்திய அரசை கண்டித்து, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காலி சொம்புகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
அப்போது, முதல்வர் சித்தராமையா கூறியதாவது: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக தான், மத்திய அரசிடம் நிதி கேட்டோம். வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கேட்கவில்லை.
மாநிலத்தில் இருந்து, ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரி செலுத்துகிறோம். 18,000 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதி கேட்டோம். ஆனால், வெறும் 3,454 கோடி ரூபாய் மட்டுமே தருவதாக அறிவித்துஉள்ளனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, பிரதமர் மோடி 'சொம்பு' கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
பெயரளவுக்கு சிறிது நேரம் மட்டும் போராட்டம் நடத்தி விட்டு, தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பெலகாவி புறப்பட்டு சென்றனர்.

