ADDED : ஆக 13, 2024 07:40 AM

மைசூரு: ''மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில் எங்கள் சொத்து. அரசு அனுமதி அளித்தால், நாங்களே கோவிலை நிர்வகிப்போம்,'' என அரச குடும்பத்தின் பிரமோதா தேவி தெரிவித்தார்.
மைசூரு அரண்மனையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சாமுண்டீஸ்வரி கோவில் எங்களின் சொத்து. அரசு அனுமதித்தால் நாங்களே நிர்வகிக்க தயாராக இருக்கிறோம். சாமுண்டி மலை வளர்ச்சி ஆணையம் அமைக்க, அரச குடும்பத்தினரான நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினோம்.
சாமுண்டீஸ்வரி கோவில், எங்களின் தனிப்பட்ட சொத்துகளின் பட்டியலில் உள்ளது. இதை நிர்வகிக்க ஆணையம் அமைப்பது சட்டவிரோதம்.
ஆணையம் பெயரில், அரசு விதிமுறை வகுக்க முடியாது. கோவிலில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே, அரசு தலையிடலாம். தனியார் சொத்து எது என்பது, மாநில அரசுக்கு தெரியும். 2001ல் போடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இது முடியும் முன்பே, ஆணையம் அமைப்பது ஏன். அந்த வழக்கு முடியட்டும்.
கோவிலை நிர்வகிப்பது கஷ்டமாக உள்ளது என, 1974ல் அரசுக்கு, அரச குடும்பத்தினர் கடிதம் எழுதியது உண்மைதான். அதற்கு பல காரணங்கள் இருந்தன. நிர்வகிக்கும்படி கூறினோமே தவிர, கோவிலையே சொந்தமாக்கி கொள்ளுங்கள் என, கூறவில்லை. இப்போது நாங்கள் நிர்வகிக்க தயாராக இருக்கிறோம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்களுக்கு சாதகமாக வந்தால், நாங்கள் நிர்வகிப்போம். எங்கள் முன்னோர் வகுத்த பாதையில், நாங்கள் செல்கிறோம். சாமுண்டி மலையை காப்பாற்ற முயற்சிக்கிறோம். வயநாடு, குடகு போன்று சாமுண்டி மலையும் ஆகி விடக்கூடாது என்பது, எங்களின் நோக்கமாகும்.
சமஸ்தானத்தின் தனிப்பட்ட சொத்துகளின் பட்டியலில், சாமுண்டி மலையின் அரண்மனை, நந்தி, சாமுண்டீஸ்வரி, மஹாபலேஸ்வரர் கோவில், தேவிகெரே ஏரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளும் அடங்கும். 1950லேயே சமஸ்தான சொத்துகள் பட்டியலை அளித்திருந்தோம். மத்திய அரசு 1972ல் பிறப்பித்த உத்தரவுபடி, சொத்துகளை நாங்கள் அனுபவிக்கலாம்.
எங்களின் தனிப்பட்ட சொத்துகளை தக்க வைத்து கொள்ள, அரசியல் செல்வாக்கை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். எந்த அதிகாரிகளிடமும் செல்வாக்கை காண்பிக்கவில்லை. என் கணவர் நான்கு முறை எம்.பி.,யாக இருந்தவர். அப்போதும் அவர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தவில்லை. இப்போது என் மகன் எம்.பி.,யாக இருக்கிறார். நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.