போதைப்பொருள் பயங்கரவாதியுடன் ஜெகன்மோகனை ஒப்பிட்ட சந்திரபாபு
போதைப்பொருள் பயங்கரவாதியுடன் ஜெகன்மோகனை ஒப்பிட்ட சந்திரபாபு
ADDED : ஜூலை 26, 2024 12:30 AM
அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, கொலம்பியா போதைப் பொருள் பயங்கரவாதி பாப்லோ எஸ்கோபர் உடன் ஒப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் கடந்த மே மாதம் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 175 இடங்களில், 135 இடங்களை தெலுங்கு தேசம் கட்சி வென்றது.
கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21 இடங்களையும், பா.ஜ., எட்டு இடங்களையும் கைப்பற்றின. இதையடுத்து, முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார்.
இந்நிலையில், ஆந்திர சட்டசபையில் நேற்று பேசிய சந்திரபாபு நாயுடு, ''ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் மாநிலம் முழுதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்திருந்தது,'' என குற்றஞ்சாட்டினார்.
சட்டம் - - ஒழுங்கு, கஞ்சா பரவல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு அவர் கூறியதாவது:
ஆந்திராவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பரவலுக்கு, உலகளவில் ஒருவருடன் மட்டுமே, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை ஒப்பிட முடியும். அது பாப்லோ எஸ்கோபர். அவர், கொலம்பியா நாட்டு போதைப்பொருள் பயங்கரவாதி.
பின்னாளில், அரசியல்வாதியாக மாறிய பின்னும் அவர் போதைப் பொருள் விற்று வந்தார்.
இதனால், 1970ம் ஆண்டு கால கட்டங்களிலேயே எஸ்கோபர் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இதனால், உலக பணக்காரர் வரிசையில் இடம்பிடித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் நோக்கம் என்ன? நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களைவிட பணக்காரர் ஆக வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். சிலருக்கு தேவைகள் இருக்கும். சிலருக்கு பேராசை இருக்கும் மற்றும் சிலருக்கு வெறி இருக்கும்.
இதில், வெறி பிடித்தவர்கள் மட்டுமே இது போன்ற விஷயங்களை செய்கின்றனர். ஜெகன் ஆட்சியில் ஆந்திராவின் தென் பகுதிகள் கஞ்சாவின் தலைநகரமாக திகழ்ந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.

