வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணா, பவானி மீது குற்றப்பத்திரிகை
வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணா, பவானி மீது குற்றப்பத்திரிகை
ADDED : ஆக 01, 2024 11:14 PM

பெங்களூரு: வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, அவரது மனைவி பவானி உட்பட ஏழு பேர் மீது, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, 66. இவரது மகன் பிரஜ்வல், 33. முன்னாள் எம்.பி.,யான இவர், பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமினில் வெளியே உள்ளார். வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், ரேவண்ணாவின் மனைவி பவானிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
அவரை கைது செய்ய, சிறப்பு புலனாய்வு குழுவினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றார்.
இந்நிலையில், வேலைக்கார பெண் கடத்தல் வழக்கு தொடர்பாக, பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் ரேவண்ணா, பவானி, பவானியின் உறவினர் சதீஷ் பாப்பண்ணா உட்பட ஏழு பேர் மீது, சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ரேவண்ணா கூறியதால் தான், வேலைக்கார பெண் கடத்தப்பட்டார் என்றும், அவரை வீட்டில் சிறை வைத்திருந்த போது, அவர் தப்பி செல்லாதவாறு பார்த்து கொள்ளும்படி பவானி அறிவுறுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.