*எங்கே நடைபாதை?
ரா.பேட்டை மையப் பகுதியில் இருந்து நடைபாதைக்கு இடம் ஒதுக்காமல் சாலை அகலப்படுத்துவதால் அதிருப்தி குரல் பலமாக ஒலிக்க தொடங்கி இருக்கு.
ப.பேட்டை நகரில் சாலை அகலப்படுத்தியதை ஒரு தரம் போய் பார்த்து விட்டு வந்தால் அதன் தரம் என்ன என்பதை அறியலாம். அங்கு நகர மேம்பாட்டுக்கு அக்கறை காட்டினதை பார்க்க முடியும்.
ஆனால் கோல்டு சிட்டியில் நடைபாதை விவகாரம், நகரின் தரத்தை பாழாக்கும். இதுக்கு தானா ம.அரசு, ஆறு கோடி ரூபாயை கொடுத்ததுன்னு பேசாமலா இருப்பாங்க. நடைபாதை விவகாரம் அரசியல் வாதிகளுக்கு அவல் கிடைத்தது போல் அசை போடப்போறாங்க.
***
*மெகா கொள்ளை
கோல்டு சிட்டியில் விஸ்வரூபம் எடுத்திருப்பது நிலம் அபகரிப்பு தொழில். இதற்கு கடிவாளமே இல்லாமல் பட்டா பதிவு செய்து, பல லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து வராங்க.
எல்லாமே ஆபீசர்கள் உதவியுடன், அவர்கள் காட்டும், கேட்பாரற்று கிடக்கும் நிலங்கள் பற்றி விபரம் அறிந்து சொந்தம் ஆக்கி தர்ராங்களாம்.
அரசு நிலத்தை விற்பனை செய்து வரும் நடவடிக்கையில் ஒரு கிராம பஞ்சாயத்து சிக்கி, சிறை தண்டனை பெற்றிருக்குது. இதில் நிலத்தை ஏமாந்து வாங்கிய அப்பாவிகள் குற்றவாளிகளாக சிக்கி இருக்காங்க.
வழிப்பறி, பிக்பாக்கெட்டை விட, மிக மோசமான கிரிமினல் வேலை நடப்பதை காக்கிகளும், நீதித்துறையும் தான் விழிப்பாக இருந்து ஒழிக்க வேண்டும்னு விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
***
*தல பதவிக்கு 6 கோடி
கோல்டு சிட்டி தொகுதியில் எப்போதும் இல்லாத அளவுக்கு கை கட்சி செயல் வீரர்களுக்கு மதிப்பு கூடியிருக்கு. அழைப்பு வீடு தேடி வருகிறதாம். இதற்கு முன் தேர்தல் நேரத்தில் மட்டுமே தேடப்பட்ட நிலைமை மாறியிருக்கு.
மேடைக்கு மேடை தொகுதி அசெம்பிளிக்காரருக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என கூவி வந்தவர் கூட ஒதுங்கி போய்விட்டார்.
அசெம்பிளிக்காரர் நிழலில் இ- - காத்தா பெயரில் 25 ஆயிரம் ரூபாய் வரை சுருட்டி வருபவருக்கு உள்ள மரியாதை கூட முனிசி., யில் 'மிஸ்டர் கிளீன்' தலைவரு என்ற பெயருடன் பதவியிலிருந்து இறங்கியவருக்கு இல்லையாமே. அவரையும் சரி கட்டி, கட்சியில் நெருக்கமாக செயல் பட சால்வை போர்த்தி அடக்கி விட்டாராம். தல பதவியால் 'பல சி' வரை இழப்பானதாம். இதுக்கு பேரு தான் அரசியல் என்பதை உணர வெச்சிட்டாங்களாம்.
****
* உண்டியல் என்னாகுது?
கோல்டு சிட்டி தொகுதியின் பங்காரு திருப்பதி, அரசு அறநிலையத் துறையின் கோவிலாம். இந்த கோவிலில் ஆண்டுக்கு மூன்று முறை உண்டியல் பணம் எண்ணும் வேலை நடக்கிறது. பல 'எல்' வருவதாக கணக்கில் வரவு காட்டுது. அந்த தொகை என்னாகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக, இக்கோவில் கோபுரத்துக்கு பெயின்ட் அடித்து அழகுப்படுத்தவில்லை. பக்தர்களுக்கு உரிய வசதிகளும் இல்லை என்றே சொல்கின்றனர்.
கோவிலை பாதுகாக்க, புனித தலமாக நிலைக்க, பொறுப்பானவங்க கவனம் செலுத்தலாமே. கோவில் வருமானத்தில் 20 சதவீத தொகையில் புனரமைப்பு பணிகளை செய்யலாமே.
ஹிந்து அறநிலையத்துறை வளர்ச்சி பணிகளுக்கு பல நுாறு கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக கணக்கு காட்டினாலும், கோல்டு சிட்டிக்கு அந்த தொகை கிடையாதா என்று கோல்டன் நகரம் கேட்குது.

