கை கட்சியில் பிளவு
கோலார் மாவட்டத்தில் கை கட்சி எம்.எல்.ஏ.,க்களில் திடீர் மனக்கசப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வராங்க. அசெம்பிளிகாரர்களான ப.பேட்டைக்காரர், மாலுார்காரர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பியதில் பல கோடி மோசடி நடந்ததாக தெரிவித்தார்.
முறைகேடு நடக்கவே இல்லையென மாலுாரார் பதில் சொன்னாரு. எல்லாவற்றுக்குமே ரசீதுகளே பதில் தரும் என்றாரு. கை கட்சிக்குள் உள்ளவர்களே ஊழல் விபரங்களை தெரிவித்து கதகளி ஆடுறாங்க. எதிர்க்கட்சிகள் அரசியலுக்கு 'அன்பிட்' போல தெரியுது.
ப.பேட்டைக்காரர் தன்னை சி.எம்., கோஷ்டி என இதுவரை கூறி வந்தாரு. தற்போது டி.சி.எம்., கோஷ்டியாக மாறிட்டது போல, முதல்வரின் ஆதரவாளர்களை தாக்கி பேசி வர்ராரு.
மாவட்ட கூட்டுறவு வங்கி 'எக்ஸ்' சேர்மனுக்கு ஆதரவாக புதுசா களம் இறங்கி இருக்காரு. கோல்டு சிட்டி காரரும் கூட மாவட்ட வங்கி எக்ஸ் சேர்மனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ளார். கூட்டுறவு வங்கியின் தேர்தலை நடத்தாமல் அதிகார பல்லை பிடுங்கியதால், யாருக்குமே லோன் கொடுக்க முடியாமல் போனதை கண்டித்துள்ளார்.
இவரும் டி.சி.எம்., ஆதரவுடன் சி.எம்., கோஷ்டியின் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மீது குற்றம் சாட்டி உள்ளார். இவர் தான், தேர்தல் நடத்த விடாமல் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக ஆவேசத்துடன் கூறி வருகிறார்.
எப்படியோ கோலார் கை அசெம்பிளிகாரர்களில் ஒற்றுமை இல்லை என அடையாளம் காட்டிட்டாங்க. ஆனால் குறை கூற வேண்டிய புல்லுக்கட்டு, பூ தரப்பினர் வேடிக்கை பாக்குறாங்க.
உள்ளூர் ஏமாற்றம்
கோல்டு சிட்டியில் அரசு ஆபீசர்கள் பலர், வெளியூர்காரர்களே. இவர்கள் தங்குவதற்கு வீட்டு வாடகையை அரசு வழங்கியும், உள்ளூரில் தங்குவதில்லை. எந்த ஒரு பிரச்னைக்கும் ஆபீசர்கள் கிடைப்பதில்லை.
முனிசி., பணிகளில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு வேலை வழங்காமல் எல்லாமே வெளியூர் காரர்களுக்கு தான் வழங்கி வராங்களாம். இதனால் உள்ளூர்காரர்களுக்கு வேலையில்லாமல் போயிருக்கு.
அதிலும் கை அசெம்பிளி காரரின் சொந்த பந்த, உறவுக்கு தான் கான்ட்ராக்ட் யோகம் உள்ளதாக உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் முணுமுணுக்கிறாங்க.
கோல்டு சிட்டியில் வெளியூர்காரர்களின் ஆதிக்கம் ஓவராக இருக்குதாம். இதுக்கு கடிவாளம் போட ஒரு தரப்பினர் அணி சேர்ந்திருக்காங்க.
காலியாகுது சி.எம்., கூடாரம்
ஒப்பந்தப்படி இரண்டரை ஆண்டுகளின் மாநில சி.எம்., பதவி காலியாக போகுது. அடுத்த முதல்வர் பதவிக்கு டி.சி.எம்., காத்திருக்க, அதனை முறியடிக்க ராஜ தந்திரம் கையாளப்படுது. பட்டியல் பிரிவில் ஒருவரை சி.எம்., ஆக்கணும்னு கோரிக்கை வச்சிருக்காங்க. அது ஒர்க் அவுட் ஆகல.
இதற்கு பிடி விடாமல் டி.சி.எம்., அவங்க கட்சியின் தலைமை வரை சென்று ஆக வேண்டிய வேலையை செய்து விட்டு வந்துள்ளார். தனக்கு சாதகமாக குரல் எழுப்ப பட்டியல் வகுப்பு அசெம்பிளிகாரர்களை எல்லாம் இழுத்துள்ளார்.
இதில் கோலார் மாவட்டத்தில் உள்ள நான்கு கை அசெம்பிளிகாரர்களில் 2 பேர் பட்டியல் பிரிவு, பொதுப் பிரிவில் ஒருவர் என 3 பேர் டி.சி.எம்., பக்கம் மாறி விட்டனர்.
கை கட்சியில் டி.சி.எம்., தரப்புக்கு கோலார் கவிழ்ந்து விட்டது. இதில் கோல்டு சிட்டியும் சிக்கியுள்ளது.
கோல்டு சிட்டியின் அசெம்பிளிகாரரின் நைனாவான மந்திரியும் டி.சி.எம்., பக்கம் உள்ளதாக லிஸ்ட் தயாராகி உள்ளதாக சொல்றாங்க.
சி.எம்., பக்கம் 45 பேர் இருந்தாங்களாம்; அதில் 10 பேரை டி.சி.எம்., தரப்பினர் இழுத்துட்டாங்கன்னு மேலிடத்துக்கு தெரிந்திருக்குது. இன்னும் இடம் பெயரும் வேலையும் நடந்து வருது.