முனிசி., 2024 ம் ஆண்டின் பட்ஜெட்டில் கட்டாத கழிப்பறைக்கு 24 லட்சம் ரூபாய் பில் பாஸாகியதாக வாட்ஸாப் செய்தியாளர், ஒரு தகவலை பரப்பினார். ஆனால், மக்கள் வரி பணத்தில் சல்லிக்காசு கூட முறைகேடு நடக்கவில்லை என, முனிசி., ஆபிசர்கள் இதுக்கு மறுப்பு சொல்லி இருக்காங்க.
நீதிமன்றம் அருகில் கழிப்பறை கட்ட 24 லட்சம் ரூபாய் பில் பாஸானது நிஜம் தான். நீதிமன்றம் அருகே என்பதை அந்த செய்தியாளர், நீதிமன்ற மன்ற வளாகத்தில் கழிப்பறை என புரிந்துக்கொண்டிருக்கலாம் என புது தகவலை சொல்லி இருக்காங்க.
நீதிமன்றத்துக்கும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் அருகில் கட்டப்பட்டதாக விளக்கம் அளித்திருக்கிறார்.
நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் கழிப்பறை மிகவும் பழுதடைந்து மேற்கூரையில் சிமென்ட் பெயர்ந்துள்ளது. இதை யார் சீரமைக்க போறாங்களோ. இதுக்கு எங்கிருந்து, எப்போது நிதி வருமோ.
காலரா, பிளேக், மலேரியா, அம்மை போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சாம்பியன் ரீப் சாலையில், 50 ஆண்டுகளுக்கு முன், 25 படுக்கை கொண்ட மருத்துவமனையை 10 ஏக்கரில் ஏற்படுத்தினாங்க. இங்கு மருத்துவர், ஊழியர்கள் எவ்வளவு பேர் பணியாற்றி வர்ராங்க. அவங்களுக்காவது அடிப்படை வசதி இருப்பதாக தெரியல.
ஆடு மாடுகள், தெருநாய்கள், பாம்புகள் உட்பட விஷ ஜந்துக்கள் தான் அதிகமாக காணப்படுகிறது. இந்த மருத்துவமனையை மருத்துவ அதிகாரிகள் வந்து பார்த்து விட்டு போனதாக தெரியல.
மருத்துவமனையின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஐந்து ஆண்டு கடந்தும் கவனிக்கவே இல்லை. சில சட்ட விரோத கும்பல்களுக்கு ஏற்ற இடமாக அமைந்திருக்குது. அண்மையில் கூட காக்கி காரர்கள் சில கும்பல்களை பிடித்து இழுத்துச் சென்றதை அக்கம் பக்கத்தில் இருந்தவங்க பார்த்திருக்காங்க.
அரசு மருத்துவமனை பட்டியலில் இதுவும் இருப்பதாக கணக்கில் இருக்குது. இது யாருக்கு எதுக்காக பயன்படுதோ.
திருமலையில் குடிகொண்ட சுவாமியின் கோவில் ரா.பேட்டை கீதா சாலையில் இருக்குது. இதன் ராஜகோபுரம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய ஒரு ஆண்டு ஆச்சு. அதற்கான பூமி பூஜையும் ஐதீக முறைப்படி நடத்தினாங்க.
கோவிலின் வடக்கு நுழைவாயில் பகுதியில் இடிப்பு வேலையை நடத்தினாங்க. அடுத்த பணியை மீண்டும் எப்போது தொடங்குவாங்களோ. கட்டுமான பணிகளுக்கு எத்தனை ஆண்டுகளோ. கட்டுமானப்பணிகளின் ஒப்பந்தம் யாருக்கு.
முதல் சி.எம்., நினைவெல்லாம் பிறந்த நாள், அவரின் இறந்த நாள். நேரத்தில் மட்டுமே பெருமை பேசுவது வழக்கமாக இருக்குது. அவரின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் 10 'சி' -யில் மணி மண்டபம், அங்கு நுாலகம், கண்காட்சி என பலவும் ஒரே இடத்தில் அமைய போவதாக பல ஆண்டா சொல்லி வர்றாங்க. அந்த பழைய ரிக்கார்டு தேய்ந்து போனது. உருப்படியா எதுவும் நடந்தபாடில்லை.
சுதந்திர போராட்ட தியாகிகள் 90 சதவீதம் பேர் காலமாகி விட்டதால் தியாகிகளின் 'தளபதி' யான இவரையும் மறக்கடிக்க பாக்குறாங்க.
கோல்டு சிட்டியில் இவரை நினைவுபடுத்த, தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்துக்காவது பெயரை சூட்டலாமே.