நிர்வாக துாய்மைக்காக முனிசி, அதிகாரத்தில் இருந்த 'தல' பத்து பெரிய ஆபீசரை இடமாற்றம் செய்தாரு. அவரோட சொந்த பணத்தில தான் அவரின் சேம்பருக்கே பர்னிச்சர் வாங்கினாரு. அவர் பதவி காலியானதுமே, அதை தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றாரு.
ஆனால், முனிசி.,யில் அதிகாரிகள் பொறுப்பில் நிர்வாகம் இயங்கிய நேரத்தில், 38 'சி' வருமானம் கிடைச்சதாம். இதில் செலவிட்டது 28 'சி' என கணக்கு காட்டிட்டாங்க. அந்த '28 சி'யில் செலவழித்த விபரத்தை மக்கள் பிரதிநிதிகள் கேட்காமல் ஏன் விட்டுட்டாங்க. இது இவங்களுக்கு சமூக குற்றம் ஆகாதா?
ஆனால், ஒரு சமூக ஆர்வலர் துருவ தொடங்கி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விபரம் கேட்டு வாங்கியதில் பல திடுக்கிடும் ஊழல் கதைகள் வெளி வர தொடங்கி இருக்கு. மூன்று, நான்கு வருஷத்துக்கு முன்னாடி செய்த ஒப்பந்த வேலைகளுக்கு எல்லாம் பணம் செலுத்தாமல் நிலுவையில் இருந்ததை 40 சதவீத கமிஷனோடு தீர்த்திட்டாங்களாம்.
கிடைத்த வரை சுருட்ட சரியான வாய்ப்பு கிடைத்ததாக அரசு சம்பளம் வாங்கும் பெரிய மனிதர்கள் கொண்டாட்டம் போட்டாங்கன்னு சமூக ஆர்வலர்கள் தகவல் பரிமாற்றம் செய்றாங்க.
ம.அரசின் அம்ருத் சிட்டி திட்டத்தில், கோல்டு சிட்டிக்கு 160 கோடியை வாரி வழங்கினாங்க. இதில தான் குடிநீர் கொண்டு வர பேத்தமங்களா ஏரியில் இருந்து சாம்பியன் ரீப் பம்ப் ஹவுஸ் வரை இரும்பு உருளைகளை பதிச்சாங்க. இந்த தொகை கிடைத்து 10 வருஷம் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒரு சொட்டு தண்ணீரும் கிடைக்கலையே.
இதுக்கு யாரை போய் கேட்க வேணும். பணத்தை ஒதுக்கிய ம. அரசின் நிதி மந்திரி தான் வந்து கேட்கணுமோ? இதேபோல பாதாள சாக்கடை திட்டம்னு ஒண்ணு ஏற்படுத்தினாங்க. அதுவும் அதே அம்ருத் திட்டம் தானாம். நன்றாக இருந்த சாலைகளை தோண்டி நாசமாக்கினாங்க. பல இடங்களில் பாதாள சாக்கடையின் இணைப்பே தரலையாம். இதை எல்லாம் கேட்க உள்ளூரு தலைவர்களுக்கு நேரமில்லையா? ஞாபகம் வரலையா?
ரெண்டு தொகுதிகள் உள்ளடங்கிய நகர அபிவிருத்தி குழுமம் என்ற ஒரு நிர்வாக அலுவலகம் கோல்டு சிட்டியில் இருக்குது. இதன் மூலம் புதுசா நகர வளர்ச்சிக்கு என்ன திட்டம் நிறைவேற செய்தாங்கன்னு அதோட விபரம் ஒண்ணத்தையும் காணல.
பேர் சொல்லும் அளவுக்கு பெரிய அளவில் வணிக வளாகமோ, பார்க்கிங் நிலையத்தையோ ஏற்படுத்தல. 20 ஆண்டுகளில் இதன் லே - அவுட் உருவானதாக தெரியலையே.
எதுக்காக ஒரு சேர்மன், அவருக்கு காரு, அதுக்கு பெட்ரோல், காரை ஓட்ட டிரைவரு, அவருக்கு சம்பளம், பெரிய ஆபீசரு. மூன்று நான்கு ஊழியர்கள்? ஊரை உயர்த்த உருப்படியான திட்டம் எப்போது உருவாக்கப் போறாங்களோ. ஒருமுறை கேபிடல் சிட்டி பி.டி.ஏ., வின் செயல்பாட்டை பார்த்து பாடம் படிக்க வேணாமா?
ஆஷ்ரியா திட்டம் செயல்பாட்டில் இருப்பதாக தெரியல. 35 வார்டில் தலா 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முனிசி.,யில் குவிந்ததை மூட்டை கட்டி வெச்சிருக்காங்க. 7,000க்கும் மேற்பட்டவங்க விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டதாகவும் பயனாளிகள் செலக்ட் செய்திட்டதாகவும் பேச்சளவில் அறிவிச்சாங்க.
அதில் எத்தனை பேருக்கு வீட்டு மனை கிடைக்க போகுதோ. அது யார் யார் என தெரிய வேண்டாமா? இதுக்காக இன்னொரு அசெம்பிளி தேர்தல் வரை காத்திருக்கணுமா?
வீடற்ற லிஸ்ட்டில் மைனிங் குடியிருப்பு பகுதிகளில் மட்டுமே 20,௦௦௦ குடும்பங்கள் இருக்கையில், இவர்களில் எத்தனை பேரு இந்த லிஸ்ட்டில் இருக்காங்களோ. வீட்டு மனை வழங்கும் ஆஷ்ரியா திட்டம் அமலுக்கு வருமா? இதுவும் கோல்டு மைன்ஸ் கதையை போல வரும் ஆனா வராதோ?