ADDED : மே 20, 2024 09:15 PM

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு, அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை பரிசளித்த முதல்வர் சித்தராமையாவை, நடிகர் சேத்தன் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா. இவர் நடிப்பை விட, சர்ச்சைக்குரிய பேச்சினால், அதிகம் பிரபலம் அடைந்தவர். அனைத்து கட்சித் தலைவர்களையும் விமர்சிப்பார். பெங்களூரை உருவாக்கிய கெம்பேகவுடாவை பற்றி, சமூக வலைதளத்தில் அவமதிப்பாக விமர்சித்தார். இது தொடர்பாக, ஒரு வக்கீல், சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சேத்தன் மீது வழக்கு பதிவானது.
இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவர்களை பாராட்டிய முதல்வர் சித்தராமையா, அம்பேத்கர் எழுதிய, 'அனிஹிலேஷன் ஆப் காஸ்ட்' என்ற புத்தகத்தை பரிசளித்தார்.
இது குறித்து, நடிகர் சேத்தன் 'எக்ஸ்' எனும் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, இரண்டு மாணவர்களுக்கு அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை, முதல்வர் 'சோமாரி சித்து' பரிசு அளித்துள்ளார். இது துரதிர்ஷ்டவசம்.
அம்பேத்கர் இருந்த காலத்தில், அவருக்கு மிகப்பெரிய அரசியல் எதிரியாக இருந்தது காங்கிரஸ். ஆனால் இன்று, அவரை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்த முற்பட்டுள்ளது. காந்தி எழுதிய, 36 பிராமணிய புத்தகங்களில் ஒன்றை பரிசளித்திருக்கலாம். இது நல்ல பரிசாக இருந்திருக்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

