ADDED : ஏப் 27, 2024 05:48 AM
விஜயபுரா: முதல்வர் சித்தராமையா, மேடைக்கு வந்ததும் காங்., - எம்.பி., ராகுல் கீழே இறங்கிச் சென்றதால், அவர் தர்ம சங்கடத்துக்கு ஆளானார்.
கர்நாடகாவில், மே 7ல் இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்காக அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தயாராகின்றனர்.
இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவு நடக்கும் தொகுதிகளில், அனைத்துக் கட்சிகளும் கவனம் செலுத்தியுள்ளன. இந்த தொகுதிகளில் முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர்.
விஜயபுரா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக ரமேஷ் ஜிகஜினகி, காங்கிரஸ் சார்பில் ராஜு அல்குர் போட்டியிடுகின்றனர்.
விஜயபுரா நகரில் நேற்று காங்கிரஸ் சார்பில், பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க கட்சியின் மேலிட தலைவர் ராகுல் வருகை தந்தார். காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அவரை வரவேற்றனர். பொதுக்கூட்ட மேடைக்கு வந்த ராகுலுக்கு உலர்ந்த திராட்சை மாலை அணிவித்து, அமைச்சர் எம்.பி.பாட்டீல் வரவேற்றார்.
அப்போது முதல்வர் சித்தராமையா, மேடையின் இடது படிகள் வழியாக மேலே ஏறி வந்தார். இதே நேரத்தில் ராகுல், மேடையின் வலதுபுறத்தில் இருந்து கீழே இறங்கினார்.
அப்போது அமைச்சர் சிவானந்த் பாட்டீல், முதல்வர் சித்தராமையா வருகிறார் என, ராகுலிடம் கூறினார். ஆனால் அதை கவனிக்காமல், கீழே இறங்கி சென்றுவிட்டார்.
முதல்வரும், கட்சி தலைவர்களும் ராகுல் பின்னால் ஓடி சென்று பேசினர். அனைவரும் கீழே சென்றதால் மேடை காலியானது. அதன்பின் ராகுலை, முதல்வர் மேடைக்கு அழைத்து வந்தார்.
இந்த சம்பவத்தால், முதல்வருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது.

