ADDED : மே 07, 2024 06:27 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தல் பிரசாரம் முடிந்ததை அடுத்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஊட்டியில் முதல்வர் சித்தராமையா ஓய்வெடுக்கிறார்.
கர்நாடகாவில் ஏப்., 26ம் தேதி முதல் கட்டமாக 14 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக இன்று 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக முதல்வர் சித்தராமையா தொடர்ந்து மாநிலம் முழுதும் பிரசாரம் செய்து வந்தார். இரண்டாம் கட்டத்துக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
தற்போது, வீட்டில் முதல்வர் சித்தராமையா ஓய்வெடுத்து வருகிறார். பெங்களூரில் தற்போது 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் உள்ளது.
எனவே, உறவினர்களின் ஆலோசனையின்படி, தமிழகத்தின் ஊட்டிக்கு இன்று முதல் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க புறப்படுகிறார். இங்கு 26 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் உள்ளது.
இந்த பயணத்தில், அவரது குடும்பத்தினர், உறவினர்களும் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஓய்வுக்கு பின், நாட்டின் பிற மாநிலங்களில் நடக்கும் தேர்தலுக்காக, கட்சியின் மேலிடம் உத்தரவுப்படி, அங்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.