முதல்வர் மம்தா - பயிற்சி டாக்டர்கள் 2 மணி நேரம் பேசியது என்ன?
முதல்வர் மம்தா - பயிற்சி டாக்டர்கள் 2 மணி நேரம் பேசியது என்ன?
ADDED : செப் 17, 2024 02:15 AM

கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்டோரை சமீபத்தில் கைது செய்தனர்.
இதற்கிடையே, பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, ஒரு மாதத்துக்கும் மேல் கோல்கட்டா உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களை பேச்சுக்கு முதல்வர் மம்தா அழைத்தார்; பல்வேறு நிபந்தனைகளால் அவர்கள் வரவில்லை. நான்கு முறை பேச்சுக்கு அழைத்தும் டாக்டர்கள் வராததால் முதல்வர் மம்தா அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில், பேச்சுக்கு வரும்படி ஐந்தாவது முறையாக நேற்று, பயிற்சி டாக்டர்களுக்கு முதல்வர் மம்தா அழைப்பு விடுத்தார். இதை டாக்டர்கள் ஏற்றனர்.
இதன்படி, கோல்கட்டாவின் காளிகாட் பகுதியில் உள்ள முதல்வர் மம்தாவின் வீட்டுக்கு, மாலை 6:20 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 30 பயிற்சி டாக்டர்கள் வந்தனர். மாலை 5:00 மணிக்கு பேச்சுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், பயிற்சி டாக்டர்கள் தாமதமாக வந்தனர்.
முதல்வர் மம்தா - பயிற்சி டாக்டர்கள் இடையேயான பேச்சு, இரவு 7:00 மணிக்கு துவங்கி, 9:00 மணிக்கு முடிவடைந்தது. அப்போது, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மம்தாவிடம் டாக்டர்கள் வழங்கினர். இதில் என்ன முடிவு எட்டப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
டாக்டர்கள் கோரிக்கை என்ன?
பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் செய்தவர்கள் மற்றும் சாட்சியங்களை அழித்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்
ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை
கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மற்றும் சுகாதார செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாம் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள்
அரசு சுகாதார நிறுவனங்களில் நிலவும் அச்சுறுத்தல் கலாசாரத்தை ஒழித்தல்