ஊழல் பாதுகாப்பு துறை முதல்வர் பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமார் கிண்டல்
ஊழல் பாதுகாப்பு துறை முதல்வர் பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமார் கிண்டல்
ADDED : ஜூன் 10, 2024 05:04 AM

பெங்களூரு, : ''கர்நாடகாவில் ஊழல்வாதிகளை காப்பாற்றும் துறையை, முதல்வர் சித்தராமையா புதிதாக சேர்த்துள்ளாரா. ஊழல் பாதுகாப்பு துறை முதல்வராக சித்தராமையா திகழ்கிறார்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமார் குற்றம் சாட்டினார்.
இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் பா.ஜ., அரசு இருந்த போது, 40 சதவீத கமிஷன் அரசு என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் உட்பட அக்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினார். இதை அவர் நிரூபிக்க வேண்டும். இப்போது வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின், தலித்துக்காக ஒதுக்கப்பட்ட 187 கோடி ரூபாயை கொள்ளை அடித்துள்ளனர். இது குறித்து, ராகுலின் பதில் என்ன.
பங்கு பணம்
கர்நாடகாவில் கொள்ளையடித்த பணத்தில் இருந்து, ராகுலுக்கும், ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கும் பங்கு சென்றுள்ளது. ஆணையத்தின் ஒரு அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
மற்றொரு அதிகாரி, சாட்சிகள் கலைக்க முயற்சி நடப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளார். அதிகாரியின் மரணத்திற்கு மதிப்பு இல்லையா. அதிகாரி சந்திரசேகர் தற்கொலை நடந்து, 12 நாட்களுக்கு பின், நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு தொடர்பாக, ஒன்றன் பின் ஒன்றாக சாட்சிகள் கிடைக்கின்றன. இதுபோன்று மற்ற ஆணையங்களிலும் கூட, கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருக்கும் வாய்ப்புள்ளது. இது பற்றி ஆதாரங்களை சேகரிக்க முயற்சிக்கிறோம்.
கர்நாடகாவில் ஊழல்வாதிகளை காப்பாற்றும் துறையை, முதல்வர் சித்தராமையா புதிதாக சேர்த்துள்ளாரா. ஊழல் பாதுகாப்பு துறை முதல்வராக சித்தராமையா திகழ்கிறார்.
கடிதத்தில் பரபரப்பு
தற்கொலை செய்த அதிகாரி சந்திரசேகர், எழுதி வைத்த கடிதத்தில், அமைச்சரின் வாய்மொழி உத்தரவு, பணம் பரிமாற்றம் நடந்ததை விவரித்துள்ளார். தற்போது ஆணையத்தின் கணக்கு அதிகாரி பரசுராம், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அனைத்து விபரங்களையும் தெரிவித்துள்ளார்.
நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆணைய தலைவர் பசனகவுடா தத்தல் ஏன், ராஜினாமா செய்யவில்லை. அவரையும் ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

