அரசுக்கு எதிர்க்கட்சி உத்தரவிட முடியாது ஆம் ஆத்மி மீது முதல்வர் ரேகா காட்டம்
அரசுக்கு எதிர்க்கட்சி உத்தரவிட முடியாது ஆம் ஆத்மி மீது முதல்வர் ரேகா காட்டம்
ADDED : மார் 05, 2025 08:07 PM
புதுடில்லி:“அரசு திட்டங்களை எப்போது செய்ய வேண்டும் என எதிர்கட்சி உத்தரவிட முடியாது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பா.ஜ., மிக உறுதியாக இருக்கிறது,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
தேர்தல் வாக்குறுதியான, பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை, வரும் 8ம் தேதி துவக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. சட்டசபையின் முதல் கூட்டத் தொடரிலேயே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது.
மேலும், டில்லி மாநகர் முழுதும் நேற்று, 'இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது' என்ற பேனர்களை ஆம் ஆத்மி கட்சி கட்டியிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங் தலைமையில், ஆம் ஆத்மி கட்சியினர் மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் தேதி, பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டம் துவக்கப்படும் என, பிரதமர் மோடி உறுதியளித்தது என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற எத்தனை நாட்கள் இருக்கிறது என்பதை யாரும் எங்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை. எங்கள் திட்டப்படி நாங்கள் செயல்படுவோம். அரசின் திட்டங்களை எப்போது செயல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உத்தரவிட முடியாது.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பெண்கள் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியுல்ள்ளோம். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கூறியுள்ளனர். பெண்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் விரிவாக விவாதிக்கப்பட்டன. அவற்றை செயல்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும்.
மேலும், அடுத்த மூன்று நாட்கள் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று பெண்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். டில்லி மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட் அமையும். தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.