ADDED : ஜூலை 21, 2024 07:28 AM

ஹூப்பள்ளி: மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி நேற்று ஹூப்பள்ளியில் அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதை ஒப்புக்கொள்ளும் முதல்வர் சித்தராமையா, அதிகாரிகளை சுட்டிக் காட்டுகிறார். அதிகாரிகளால் முறைகேடு நடந்திருந்தாலும், அதற்கான பொறுப்பு அரசையே சாரும். அதிகாரிகளை மட்டும் குற்றவாளி இடத்தில் நிற்க வைத்துவிட்டு, தன் அரசின் அமைச்சர்களை காப்பாற்றும் வேலையை, முதல்வர் செய்கிறார்.
முந்தைய பா.ஜ., அரசில் நடந்த, 21 ஊழல்களை சட்டசபையில் முதல்வர் சித்தராமையா பட்டியலிட்டதை, 'டிவி'யில் நானும் பார்த்தேன். 2011 மற்றும் 2012ல் நடந்த ஊழல்களை பற்றி, யாரிடமோ எழுதி வாங்கி வந்து, சட்டசபையில் முதல்வர் படித்தார். 2013 முதல் 2018 வரை, மாநிலத்தில் அவரது அரசு தான் இருந்தது. அப்போது ஏன் சித்தராமையா மவுனமாக இருந்தார்?
இப்போதும் அவரது ஆட்சி துவங்கி, ஓராண்டுக்கு மேலாகிறது. தன் தவறை மூடி மறைக்கும் நோக்கில், சித்தராமையா புரளி கிளப்புவார். இத்தகைய அரசை, நான் எப்போதும் பார்த்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.