மிருணாள் வெற்றியால் என் பலம் அதிகரிக்கும் முதல்வர் சித்தராமையா எதிர்பார்ப்பு
மிருணாள் வெற்றியால் என் பலம் அதிகரிக்கும் முதல்வர் சித்தராமையா எதிர்பார்ப்பு
ADDED : மே 02, 2024 06:23 AM

பெலகாவி: ''பெலகாவியில் காங்கிரஸ் வேட்பாளர் மிருணாள் வெற்றி பெற்றால், எனக்கு பலம் அதிகரிக்கும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெலகாவி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கோகாக்கில் காங்கிரசின், 'மக்கள் குரல்' மாநாடு நடந்தது. இதில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
லோக்சபா தேர்தல் தோல்வி பயத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி, தற்போது தேர்தல் நேரத்தில் புதிய பொய்களை பரப்பி வருகிறார்.
இத்தேர்தலில் நீங்கள் அளிக்கும் முடிவு, நாட்டின் எதிர்காலத்தையே மாற்றும். நாட்டு மக்களிடம் மோடி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். 2013ல் ஆட்சிக்கு வந்ததும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சித்தோம். பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில், உணவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இதற்கு, மோடி பெருமை சேர்க்கவில்லை.
'வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் கொண்டு வரப்பட்டு, அனைத்து அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும்' என்றார் மோடி.
பத்து ஆண்டுகளாகியும் ஒரு பைசா வரவில்லை. 'ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்' என்றார். ஆனால் வேலையில்லா பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முந்தைய தேர்தல்களில் புல்வாமா தாக்குதல், 370வது சட்டப்பிரிவு, தொடர் பொய்களின் அடிப்படையில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது.
'பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் வழங்கும்' என, பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
'கர்நாடகாவில், அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கவில்லை' என்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. வளர்ச்சிப் பணிகளும் நிறுத்தப்படவில்லை.
நாங்கள் அளித்த ஐந்து வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கர்நாடகா, தெலுங்கானாவில் வாக்குறுதித் திட்டங்கள் அமலுக்கு வந்த பின், காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
மத்தியில் எங்கள் அரசு வந்தால், மஹாலட்சுமி திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
பெலகாவியில் காங்கிரஸ் வேட்பாளர் மிருணாளை வெற்றி பெற்றால், எனக்கு பலம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

