வளர்ச்சி பணிகளுக்கு கூடுதல் வரி அவசியம் அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா 'ஐஸ்'
வளர்ச்சி பணிகளுக்கு கூடுதல் வரி அவசியம் அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா 'ஐஸ்'
ADDED : ஜூலை 02, 2024 06:36 AM

பெங்களூரு: ''கூடுதல் வரி வசூல் ஆகும்பட்சத்தில், மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் நடக்கும். வாக்குறுதித் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு, ஆண்டுக்கு, 60,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மாநில வணிக வரித்துறை சார்பில், ஜி.எஸ்.டி., தின விழா, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை துவக்கி வைத்து, முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மக்களாட்சிக்கு முன்பு இருந்த, மன்னராட்சியின் போதும், வரி வசூலிக்கும் நடைமுறை இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளன. கதம்பர் மன்னர் ஆட்சியிலேயே, கர்நாடகாவில் விற்பனை வரி இருந்தது என்பதற்கு கல்வெட்டுகளில் குறிப்புகள் கிடைத்தன.
மாநிலத்தை நிர்வாகம் செய்வதற்கு, வரி வசூலிப்பது அவசியம். வரி செலுத்துபவர்கள் மட்டுமே செலுத்துகின்றனர். ஒவ்வொரு அரசும், வரி வசூலித்து தான் மாநிலத்தையும், நாட்டையும் நிர்வாகம் செய்கின்றன. மத்திய, மாநில அரசுகள், வரி வசூலிப்பதற்கு, அரசியல் அமைப்பு வரி விதிக்கும் அதிகாரம் அளித்துள்ளது.
ஜி.எஸ்.டி., அமலுக்கு வருவதற்கு முன்னரே, கர்நாடகாவில் 'வாட்' வசூலித்து வந்தோம். ஜி.எஸ்.டி., என்பது மறைமுக வரியாகும். மத்திய அரசு, மாநிலங்களுக்கு தங்களின் பங்கு வரியை, சரியாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தற்போது, 16வது நிதி ஆயோக் அமைய உள்ளது. அப்போது, மாநில அரசின் பங்கு முழுமையாக வழங்கும்படி வலியுறுத்தப்படும். 15வது நிதி கமிஷன்படி, மாநில அரசுக்கு, 1.7 சதவீதம் வரி குறைந்துள்ளது.
கூடுதல் வரி வசூல் ஆகும்பட்சத்தில், மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் நடக்கும். வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, ஆண்டுக்கு, 60,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
சமூகம், பொருளாதார ரீதியில் அனைவருக்கும் பலம் கிடைத்தால் மட்டுமே, ஏற்றத்தாழ்வு இன்றி, சமத்துவம் கொண்டு வர முடியும். அனைத்து சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்கும் பலம் கிடைக்கும் வேண்டும் எனில், வளத்தை பெருக்க வேண்டும்.
வரி வசூலிப்பில், வணிக வரித்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2022 - 23ல் 1,22,821 கோடி ரூபாயும்; 2023 - 24ல் 1,45,266 கோடி ரூபாய் வரி வசூல் செய்து, சிறப்பான முறையில் செயல்படுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
வரி வசூலிப்பில் சிறந்து விளங்கிய, 65 அதிகாரிகள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.