முனியப்பா மருமகனுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா உள்குத்து?
முனியப்பா மருமகனுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா உள்குத்து?
ADDED : மார் 28, 2024 10:41 PM
தங்கவயல் : கோலார்தொகுதியில் போட்டியிட அமைச்சர் முனியப்பா மருமகனுக்கு 'சீட்' வழங்கக்கூடாதென, என்ற கோஷத்தின் பின்னணியில் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாக கட்சியினரே கிசுகிசுக்கின்றனர்.
கோலார் தொகுதியில் தன் மருமகன் சிக்க பெத்தண்ணாவுக்கு 'சீட்' அமைச்சர் முனியப்பா முயற்சி செய்தார். ஆரம்பத்தில் எந்த சலசலப்பு இல்லாமல் இருந்த நிலையில் திடீரென எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி., ராஜினாமா மிரட்டல் கோஷம் எழுந்தது.
முனியப்பாவின் மருமகனுக்கு 'சீட்' வழங்கக்கூடாதென, முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமதுவும் வலியுறுத்தினார். இதனால் இந்த விவகாரத்தின் பின்னணியில் முதல்வர் தலையீடு இருப்பதாக கட்சியினரே கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட முதல்வர் சித்தராமையா தயாராகி வந்தார். அப்போது, 'அவர் உள்ளூர்காரர் இல்லை' எனக்கூறி இந்தத் தொகுதியில் சித்தராமையா களமிறங்குவதற்கு முனியப்பா எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு பழிவாங்குவதற்காகவே முனியப்பாவின் மருமகனுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்ற கோஷத்தை எழுப்பும் கட்சியினரின் பின்னணியில் முதல்வர் இருக்கலாம் என்று கட்சியினர் கருதுகின்றனர்.
அதாவது அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த வேண்டிய முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமது, அவர்களை துாண்டிவிடுவது பலருக்கும் சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

