ADDED : ஆக 20, 2024 11:30 PM
பெங்களூரு : 'மூடா' முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக, வரும் 23ம் தேதி முதல்வர் சித்தராமையா டில்லி செல்கிறார்.
'மூடா' முறைகேடு தொடர்பாக, முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த, கவர்னர் தாவர்சந்த் கெலாட், இம்மாதம் 17ம் தேதி அனுமதி அளித்தார். இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடத்திய நீதிபதி நாகபிரசன்னா, வரும் 29ம் தேதி மதியம் 2:30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதுவரை, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கும் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
வழக்கு விசாரணை எதை நோக்கிச் செல்லும்; அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, வரும் 23ம் தேதி, முதல்வர் சித்தராமையா டில்லி செல்கிறார். அவருடன் சில அமைச்சர்களும் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தேசிய அமைப்பு பொதுச் செயலர் வேணுகோபால், மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், தன் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதாடும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.
இதுகுறித்து, சித்தராமையா கூறுகையில், ''விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்த விவகாரம், நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு குறித்து, கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக, டில்லி செல்ல உள்ளேன்,'' என்றார்.