ஊட்டியில் 3 நாள் ஓய்வுக்கு பின் மைசூரு திரும்பினார் முதல்வர் சித்தராமையா
ஊட்டியில் 3 நாள் ஓய்வுக்கு பின் மைசூரு திரும்பினார் முதல்வர் சித்தராமையா
ADDED : மே 10, 2024 10:51 PM
மைசூரு : ஊட்டியில் மூன்று நாட்கள் ஓய்வுக்கு பின், முதல்வர் சித்தராமையா, நேற்று மைசூரு திரும்பினார்.
கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சித்தராமையா தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
தேர்தல் முடிந்த நிலையில், அவர் குடும்பத்தினருடன் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு கடந்த 7ம் தேதி சென்றார்.
முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்கள் ஜார்ஜ், மஹாதேவப்பா, அவரது அரசியல் செயலர் கோவிந்த்ராஜ் ஆகியோரும் உடன் சென்றனர். ஊட்டியில் தனியார் சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர்.
அங்கு மூன்று நாட்கள் நன்றாக ஓய்வெடுத்த முதல்வர், தான் விரும்பிய சைவம், அசைவ உணவுகளை சாப்பிட்டார். நேற்று முன்தினம், குடும்பத்தினருடன் அரசு தாவரவியல் பூங்காவை, காரில் இருந்தபடி சுற்றி பார்த்தார்.
மூன்று நாட்கள் ஓய்வுக்கு பின், ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலை மைசூரு விமான நிலையத்துக்கு வந்தார். மைசூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.