முதல்வர் சித்தராமையா சமரசம் எம்.எல்.ஏ., துக்காராம் ராஜினாமா
முதல்வர் சித்தராமையா சமரசம் எம்.எல்.ஏ., துக்காராம் ராஜினாமா
ADDED : ஜூன் 15, 2024 04:27 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி., ஆன துக்காராம், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பல்லாரி சண்டூர் தொகுதியில் இருந்து, நான்கு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் துக்காராம். லோக்சபா தேர்தலில் பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.,வின் ஸ்ரீ ராமுலுவை 98,992 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் ஏதாவது ஒரு பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதால், துக்காராம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்பட்டது.
ஆனால், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டில், அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்ததால், அமைச்சர் பதவி மீது துக்காராமுக்கு ஆசை ஏற்பட்டது. எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய தயக்கம் காண்பித்தார்.
ஆனால், அவரிடம், முதல்வர் சித்தராமையா பேசினார். இதன் பின்னரே, எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்ய துக்காராம் முன்வந்தார்.
சட்டசபை சபாநாயகர் காதரை தொடர்பு கொண்டு, ராஜினாமா செய்ய இருப்பது பற்றி கூறினார்.
சொந்த ஊருக்கு சென்றிருப்பதால், சட்டசபை செயலர் விசாலாட்சியிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கும் படி துக்காராமுக்கு காதர் அறிவுறுத்தினார்.
அதன்படி விசாலாட்சியிடம், ராஜினாமா கடிதத்தை நேற்று துக்காராம் அளித்தார். இதன்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 135ல் இருந்து 134 ஆக குறைந்துள்ளது.

