சட்டப்படியே மனைவிக்கு மனைகள் ஒதுக்கீடு 'மூடா' புகாருக்கு முதல்வர் சித்தராமையா விளக்கம்
சட்டப்படியே மனைவிக்கு மனைகள் ஒதுக்கீடு 'மூடா' புகாருக்கு முதல்வர் சித்தராமையா விளக்கம்
ADDED : ஜூலை 25, 2024 11:01 PM

பெங்களூரு: ''மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், வீட்டுமனை வழங்கியதில் நடந்ததாக கூறப்படும் முறைகேட்டில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை. சட்டத்துக்கு உட்பட்டே, என் மனைவிக்கு மனைகள் வழங்கப்பட்டன,'' என முதல்வர் சித்தராமையா, மேல்சபையில் விளக்கமளித்தார்.
கர்நாடக காங்கிஸ் அரசு, இரண்டு ஆணையங்களில் நடந்த முறைகேடு குற்றசாட்டில் சிக்கி தவிக்கிறது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் 87 கோடி ரூபாய் சட்டவிரோதமாக, வெளி மாநிலத்தின் கூட்டுறவு வங்கிகளின் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே போன்று மூடா எனும், மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், சட்டவிரோதமாக மனைகள் வழங்கியதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மைசூரின், பிரபலமான பகுதியான விஜயநகரில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றன.
இது தொடர்பாக, சட்டசபையில் முதல்வர் சித்தராமையா ஏற்கனவே விளக்கமளித்தார். 'எந்த தவறும் செய்யாத போது, நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்' என, கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே மேல்சபையில் எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள், மூடா குறித்து விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என, நேற்று பிடிவாதம் பிடித்தனர். சபை தலைவர் இருக்கைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் சபையில் நடந்த விவாதம்:
முதல்வர் சித்தராமையா: எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் விஷயத்தில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு மனை வழங்கும்படி நாங்கள், மூடாவில் விண்ணப்பித்தோம். அதன்படியே மனைகள் வழங்கினர். இதில் முறைகேடு விஷயம் எங்கிருந்து வந்தது.
எங்களுக்கு சொந்தமான 38,000 சதுர அடி நிலத்தை, மூடா கையகப்படுத்தியது. இதற்கு நிவாரணமாக மனைகள் வழங்கியது. 2014ல் நான் முதல்வராக இருந்த போது, எந்த முறைகேடும் நடக்கவில்லை என, நான் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தேன்.
நாங்கள் இதே இடத்தில் வீட்டுமனை வழங்க வேண்டும் என, நாங்கள் கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால் அது முறைகேடாக இருந்திருக்கும். மூடாவினரே குறிப்பிட்ட இடத்தில் மனை வழங்கினர். நாங்கள் அந்த விஷயத்தில் தலையிடவில்லை.
எதிர்க்கட்சியினரின் நோக்கம் என்ன என்பது, எங்களுக்கு தெளிவாக தெரியும். நான் முதல்வரானதால், இவர்களுக்கு வயிற்று எரிச்சல். 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், என் மீது எந்த கரும்புள்ளியும் இல்லை.
நான் முதல்வராக இருப்பதை சகிக்க முடியாமல், என் முகத்தில் கரியை பூச முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் முயற்சி பலனளிக்காது.
மூடா முறைகேடு குறித்து, விசாரணை நடத்த மாநில அரசு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது.
மூடா தலைவராக இருந்த ராஜிவ் என்பவரே, வீட்டுமனைகள் வழங்கியுள்ளார். பா.ஜ., அரசில்தான் இது நடந்தது. இப்போது என் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
சட்டசபை கூட்டம் நடக்க கூடாது என்பது, எதிர்க்கட்சிகளின் தந்திரமாகும். உள் நோக்கத்துடன் ஒரே விஷயத்தை, அவ்வப்போது பேசுகின்றனர்.
மூடா குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்கும் கோரிக்கையை, மேல்சபை தலைவர் நிராகரித்துள்ளார். ஆனால் இதே விஷயத்தை விவாதிக்க வேண்டும் என, பிடிவாதம் பிடிப்பது சரியல்ல.
மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி: நீங்கள் இந்த விஷயத்தை, தனிப்பட்ட விஷயமாக பார்க்கிறீர்கள். உங்கள் மீது எங்களுக்கு எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லை.
மூடாவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை பற்றி விவாதிக்க வேண்டும் என, நாங்கள் வாய்ப்பு கேட்பது தவறா.
இது பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான விஷயமாகும். இந்த முறைகேட்டில் முதல்வரின் குடும்பத்தினருக்கு தொடர்பிருப்பதாக தெரிகிறது. இத்தகைய முக்கியமான விஷயத்தை நாங்கள் விவாதிக்கவே கூடாது என்றால் எப்படி.
(அப்போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், அரசை எதிர்த்து கோஷமிட்டனர். இவ்வேளையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான், முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக எழுந்து நின்றார்)
பா.ஜ., - ரவி: சமுதாயவாதி என, கூறிக்கொள்கின்றனர். தலித்துகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகின்றனர்.
ஆனால் இவர்களின் நிலத்தையே அபகரிக்கின்றனர். தலித்துகளை முன்னேற்றுவதாக கூறி, அவர்களின் முதுகில் குத்துகின்றனர்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின், 87 கோடி ரூபாய் தெலுங்கானாவுக்கு சென்றுள்ளது. தலித்துகளின் நிதியை தின்ற சித்தராமையாவை நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

