முதல்வருக்கு 56வது பிறந்தநாள் சிறைக்கு வெளியே கொண்டாட்டம்
முதல்வருக்கு 56வது பிறந்தநாள் சிறைக்கு வெளியே கொண்டாட்டம்
ADDED : ஆக 16, 2024 09:09 PM

ஜனக்புரி:முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்தநாளை திகார் சிறைக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர்.
நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 56வது பிறந்தநாள். இதை கொண்டாடும் வகையில் ஆம் ஆத்மி கட்சி தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் சிலர், திகார் சிறைக்கு வெளியே கூடி, அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
இதற்கு ஏற்பாடு செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பிரதீப் லோகன், “நாங்கள் அவரைச் சந்திக்க விரும்பினோம், ஆனால் அனுமதிகிடைக்கவில்லை. அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கேக் வெட்டினோம். அவருக்கு எங்களின் செய்தி, 'நீங்கள் விரைவில் எங்களுடன் இருப்பீர்கள்' என்பதுதான்,” என்றார்.
ஜனநாயகத்தை பாதுகாக்கும்!
தங்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்தநாளுக்கு டில்லி மக்கள் வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள். அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த அரசியல் சதிக்கு மத்தியில், நாட்டின் அரசியலமைப்பு இன்னும் சிதையாமல் உள்ளது. ஜனநாயகத்தை உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. விரைவில் நீதி வழங்கும்.
- சுனிதா கெஜ்ரிவால்
நாட்டில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மிகக் கடுமையான போரை நடத்திய டில்லி முதல்வரும், எனது அன்பு நண்பரும், அரசியல் குருவுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
சர்வாதிகாரியின் முன் மண்டியிடுவதை விட சிறைக்குச் செல்வதைத் தேர்ந்தெடுத்த தேசபக்தி மற்றும் புரட்சித் தலைவரின் வீரர்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இன்று நாட்டின் ஜனநாயகம் அரவிந்த் கெஜ்ரிவால் வடிவத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
- மணீஷ் சிசோடியா
ஆம் ஆத்மி தலைவர்
தனது மாடல் ஆட்சியால் டில்லியின் நிலையை மாற்றிய நவீன இந்தியாவின் புரட்சியாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்தநாள் இன்று.
தன்னுடைய நேர்மையான அரசியலால் டில்லி மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தார். சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடி கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை வடிவமைத்த அரவிந்த், இன்று பொய் வழக்கில் சிறையில் இருக்கிறார். ஆனால் உண்மை வெல்லும், டில்லி மக்களின் விருப்பமான முதல்வர். விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்.
- ஆதிஷி
அமைச்சர்