ADDED : ஜூலை 04, 2024 02:39 AM

பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் நடந்த முறைகேடுகளை கண்டித்து, முதல்வர் சித்தராமையா வீட்டை முற்றுகையிட சென்ற, பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறையீடு தொடர்பாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, அந்த ஆணையத்தில் பணியாற்றிய சந்திரசேகர், 52 என்ற அதிகாரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதயைடுத்து, அத்துறைக்கு அமைச்சராக இருந்த நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வரும் பதவி விலக வேண்டும் என்று, பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மைசூருநகர மேம்பாட்டு வாரியம் சார்பாக, வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர்.முதல்வரின் மனைவி பார்வதிக்கும், சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் நடந்த முறைகேடுகளை கண்டித்தும், முதல்வர் சித்தராமையா பதவி விலக கோரியும், பெங்களூரில் உள்ள முதல்வரின் இல்ல அலுவலகமான காவிரியை முற்றுகையிட, குமர கிருபா அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் நேற்று காலை பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தலைவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
அவர்களை பாதி வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார், பா.ஜ., தலைவர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.இதன்பின், எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கை கைது செய்த போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர்.
மாநில தலைவர் விஜயேந்திரா, எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டு, பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். மதியம் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
� பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை போலீசார் பஸ்சில் ஏற்றினர். � எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கை குண்டுகட்டாக துாக்கி சென்ற போலீசார். இடம்: பெங்களூரு.