ADDED : ஜூன் 30, 2024 10:38 PM

பெலகாவி : ''கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை. இதை பற்றி விவாதிப்பது அர்த்தமற்றது,'' என சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது: ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தும்படி, காங்கிரசுக்கு மக்கள் அதிகாரம் அளித்துள்ளனர். கட்சி மேலிடம் பார்வையாளர்களை அனுப்பி, அனைத்து எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகளை கேட்டறிந்து, சித்தராமையாவை முதல்வராக்கியது.
முதல்வரை நியமித்த போது, மேலிட தலைவர்கள் என்னென்ன விஷயங்களை பற்றி ஆலோசித்தனர் என்பது குறித்து, பகிரங்கப்படுத்த முடியாது. முதல்வர் பதவி காலியாக இல்லை. இதை பற்றி விவாதிப்பது அர்த்தமற்றது. லோக்சபா தேர்தலின் போது, ஜாதி வாரியாக துணை முதல்வர்கள் பதவி உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதை பற்றி கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.
கட்சியின் நன்மையை கருதி, வெளிப்படையாக பேசக்கூடாது. டில்லியில் முதல்வர், துணை முதல்வர் பதவி தொடர்பாக, ஆலோசனை நடக்கவில்லை. கட்சியை பலப்படுத்துவது, வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.