அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி உடல்நல குறைவால் காலமானார்
அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி உடல்நல குறைவால் காலமானார்
ADDED : ஜூன் 22, 2024 05:11 PM

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் தலைமைப் பூசாரிகளில் ஒருவரான ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் உடல்நல குறைவால் இன்று (ஜூன் 22) காலமானார். அவருக்கு வயது 86.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 22ம் தேதி நடந்தது. ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க 4 ஆயிரம் சாமியார்களுக்கு அழைப்பு விடப்பட்டது. அப்போது, கும்பாபிஷேக விழாவில் பூஜைகள அனைத்தையும் தலைமையேற்று நடத்தியவர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீக்ஷித்.
இவர் உடல்நல குறைவால் இன்று (ஜூன் 22) காலமானார். அவருக்கு வயது 86. மஹாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். கடந்த சில நாட்களாக, அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீக்ஷித், மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஈடுசெய்ய இயலாத இழப்பு
இது குறித்து யோகி வெளியிட்டுள்ள அறிக்கை: காசியின் சிறந்த ஒரு பண்டிதர் மற்றும் ஸ்ரீராம ஜென்மபூமியில் கும்பாபிஷேக விழாவின் போது, தலைமை பூசாரியாகவும் செயல்பட்ட ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீக்ஷித்ஜியின் மறைவு ஆன்மிக உலகத்துக்கும் இலக்கிய உலகத்துக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும்.
சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாசாரம் ஆகியவற்றிற்கு அவர் ஆற்றிய சேவை அதிகம். அவருடைய ஆன்மா கடவுள் ஸ்ரீராமரின் பாதத்தில் இளைப்பாற ஓரிடம் தரும்படி ஸ்ரீராமரிடம் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இவ்வாறு யோகி கூறியுள்ளார்.