பணியில் உள்ள 'ஓய்வு' அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப தலைமை செயலர் உத்தரவு
பணியில் உள்ள 'ஓய்வு' அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப தலைமை செயலர் உத்தரவு
ADDED : ஜூன் 18, 2024 06:24 AM
பெங்களூரு: கர்நாடகாவில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 370க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஊழியர்களை, உடனடியாக விடுவிக்க, 20 துறைகளின் தலைவர்களுக்கு, கர்நாடக தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயல் உத்தரவிட்டு உள்ளார்.
அரசு துறைகளில் ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள், ஊழியர்கள், நிர்வாக வசிக்காக ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் ஒப்பந்த ஊழியர்களாக சேர்க்கப்படுவர். இவர்கள் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் பணியில் இருப்பர்.
370 பேர்
இவ்வாறு, கர்நாடகாவின் 20 துறைகளில் 370க்கும் மேற்பட்டோர் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை உடனடியாக விடுவித்து, பணியில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களை பணியமர்த்த, கடந்த ஜன., 9ம் தேதி, மாநில தலைமை செயலருக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் ஜனவரி 23, பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் குறிப்பு அனுப்பி இருந்தார்.
அறிவுறுத்தல் மீறல்
ஆனால் பெரும்பாலான துறையினர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இந்த அறிவுறுத்தலை மீறி, ஓய்வு பெற்ற அதிகாரிகள், பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக, மாநில தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயல், மீண்டும் தெளிவான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
அதில், 'மாநில அரசின் கருவூலத்துக்கு கூடுதல் நிதி சுமையாக இருக்கும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 370க்கும் மேற்பட்ட ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஊழியர்களை, உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
அதன்பின், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எனது அலுவலத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என குறிப்பிட்டு உள்ளார்.
சில துறைகள் மற்றும் அமைச்சகங்களில், தேவையற்ற பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், பணியாளர்கள், ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, ஊதியம், வாகனம், இதர வசதிகள் வழங்கப்படுகின்றன.
ரூ.5 லட்சம் சம்பளம்
ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - கே.ஏ.எஸ்., அதிகாரிகள், மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகள், நிதி அதிகாரிகள், டாக்டர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் சிலருக்கு மாதந்தோறும் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. சிலருக்கு வாகன வசதி மட்டும் வழங்கப்பட்டு உள்ளது.
சிலருக்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், தனி செயலர், தனிப்பட்ட உதவியாளர்களுடன் குளிரூட்டப்பட்ட அறை வசதி வழங்கப்பட்டு உள்ளது. சிலருக்கு ஓட்டுனர்களை பணியமர்த்த, தனி அலவன்ஸ் வழங்கப்படுகிறது.
மேலும் சிலருக்கு, அரசின் முதன்மை செயலர், தலைமை பொறியாளர் ஆகியோருக்கு இணையான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட துறை அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
70 தாண்டியவர்கள்
சில துறைகளில் ஓய்வு பெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட 40 பேர், பல ஆண்டுகள் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக, துணை முதல்வர் அலுவலகத்தில் மின் ஆலோசகராக உள்ள முனிலிங்க கவுடா, 82; கட்டடம் மற்றம் இதர கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் தியாவயா, 79; ஏரி பாதுகாப்பு ஆணையத்தில் தேஷ்முக், 76; தோட்டக்கலை துறையில் ராமமூர்த்தி, 75; பெங்களூரு மாநகராட்சியில் கெஞ்சய்யா, 76.
கர்நாடக நீர்பாசன துறையில் ரங்கராஜன், 77; காவேரி நீர் வாரியத்தில் அமரப்பா ஜம்பண்ணா நாகலிகர், 78; காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தில் முனிராமையா ஷெட்டி, 75; எம்.எஸ்.ஐ.எல்.,லில் ஜோதிலிங்கம், 76, கங்காதர் என 75 வயதை கடந்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.
ஏற்கனவே, கர்நாடகா ஐந்து வாக்குறுதி திட்டங்கள் அமலில் உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அரசு செலவழித்து வருகிறது. நிதி சுமையை சமாளிக்க, திண்டாடி வருகின்றனர்.
இதை தவிர்க்கவே, ஓய்வு பெற்ற பின்னரும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களை விடுவிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.