ADDED : ஜூன் 01, 2024 04:09 AM

பெங்களூரு : ''வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அமைச்சர் நாகேந்திரா மட்டும் ராஜினாமா செய்தால் போதாது. முதல்வர் சித்தராமையாவும் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் வலியுறுத்தினார்.
கலபுரகியில் நேற்று அவர் கூறியதாவது:
எஸ்.ஐ., நியமன ஊழல் குறித்து, தொண்டை கிழியும் வகையில் கூப்பாடு போட்ட அமைச்சர் பிரியங்க் கார்கேவின் வீரம், இப்போது எங்கு போனது? அவரது வீரபத்ர அவதாரம் மாயமாகிவிட்டது; தியானத்தில் அமர்ந்துள்ளதா?
பா.ஜ.,வை 40 சதவீதம் கமிஷன் அரசு என குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர்கள், வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி தற்கொலை செய்த பின்னரும், மவுனமாக இருப்பது ஏன்?
இந்த ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அமைச்சர் நாகேந்திரா மட்டும் ராஜினாமா செய்தால் போதாது; முதல்வர் சித்தராமையாவும் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த முறைகேடு தொகையில், டில்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத்துக்கும் பங்கு சென்றதை மறுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

