ADDED : மார் 26, 2024 09:31 PM

சிக்கபல்லாப்பூர் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி நேற்று சந்தித்து பேசினார். சிக்கபல்லாப்பூர் 'சீட்' கொடுக்கும்படி கெஞ்சி உள்ளார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி. மத்திய அமைச்சராக இருந்தவர். 2009, 2014 லோக்சபா தேர்தல்களில், சிக்கபல்லாப்பூர் தொகுதியில் இருந்து, காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பச்சேகவுடாவிடம் தோற்றார். நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாப்பூர் சீட்டுக்காக வீரப்ப மொய்லி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரக் ஷா ராமையா இடையில், கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இளைஞர் என்பதால் ரக் ஷா ராமையாவுக்கு சீட் கொடுக்க, காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது.
இந்நிலையில் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, வீரப்பமொய்லி நேற்று சந்தித்து பேசினார். சிக்கபல்லாப்பூர் சீட்டை தனக்கு தரும்படி, கெஞ்சி உள்ளார். 'பா.ஜ., சார்பில் போட்டியிடும் சுதாகருக்கு, கட்சிக்குள் எதிர்ப்பு உள்ளது. இதனால், அவர் வெற்றி பெறுவது கடினம். நான் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்' என்றும் கார்கேயிடம், வீரப்ப மொய்லி கேட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
