அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த சிக்கமகளூரு வீரர்
அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த சிக்கமகளூரு வீரர்
ADDED : மே 07, 2024 06:30 AM

சிக்கமகளூரு: அடுத்த மாதம் துவங்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், அமெரிக்க கிரிக்கெட் அணியில், சிக்கமகளூரை சேர்ந்த நோஸ்துஷ் கென்ஜிகே இடம்பிடித்து உள்ளார்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், அடுத்த மாதம் 2ம் தேதி துவங்குகிறது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அமெரிக்கா அணியில் இடது கை பேட்ஸ்மேன் நோஸ்துஷ் கென்ஜிகே, 33 இடம்பிடித்து உள்ளார்.
இவர் கர்நாடகாவின் சிக்கமகளூரு மூடிகெரேயை பூர்விகமாக கொண்டவர். நோஸ்துஷ் கென்ஜிகேவின் தந்தை பிரதீப் கென்ஜிகே. காபி தோட்ட அதிபர்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப்பும், அவரது மனைவியும் அமெரிக்காவின் அரிசோனாவில் வசித்தனர். அங்கு நோஸ்துஷ் பிறந்தார். அதன்பின்னர் பிரதீப், மனைவி, மகனுடன் கர்நாடகா வந்து விட்டார். மூடிகெரேயில் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்த நோஸ்துஷ், பெங்களூரில் இன்ஜினியரிங் படித்தார்.
பின்னர் 2015ல் வேலை விஷயமாக அமெரிக்கா சென்றார். அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றார். கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்ததால், கிளப் போட்டிகளில் நோஸ்துஷ் விளையாடினார்.
இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதுடன், இடது கை சுழற்பந்து வீச்சாளருமாக இருப்பதால், கடந்த 2019ல் அமெரிக்க கிரிக்கெட் அணி சார்பில், ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகம் ஆனார். கடந்த மாதம் 7ம் தேதி கனடாவுக்கு எதிரான போட்டியின் மூலம், 20 ஓவர் கிரிக்கெட்டிலும் அடியெடுத்து வைத்தார்.
இப்போது 20 ஓவர் உலக கோப்பை போட்டியில், அமெரிக்க அணியில் இடம் கிடைத்து உள்ளது. அமெரிக்க அணியின் கேப்டனாக இருக்கும், மோனக் படேலும் இந்தியர். அவர் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்தவர்.