ADDED : செப் 07, 2024 02:40 AM

புதுடில்லி, 'குழந்தைகளை அசையும் சொத்தாக கருதி, அவர்களின் இருப்பிடத்தை மாற்றுவதற்கான உத்தரவை நீதிமன்றங்கள் பிறப்பிக்கக் கூடாது' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், 2022ல் இறந்தார். தந்தையும் இல்லாமல் நிராதரவான, அவரது குழந்தை, தாய்வழி அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறது. இந்த குழந்தையை தந்தை வழி தாத்தா - பாட்டியிடம் ஒப்படைக்க ம.பி., உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் ஏ.ஜி. மசிஹ் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
ஒரு மைனர் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை கையாளும் நீதிமன்றங்கள், குழந்தையை அசையும் சொத்தாக கருதி, அது தொடர்பான பிரச்னைகளை ஆராயாமல், அதன் இருப்பிடத்தை மாற்ற உத்தரவிடக் கூடாது. இந்த வழக்கில் ம.பி., உயர் நீதிமன்றம் குழந்தையின் நலன் குறித்த பிரச்னையை பரிசீலிக்காதது வெளிப்படையாக தெரிகிறது. குழந்தையின் பாதுகாப்பை சீர்குலைத்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களாக அத்தையின் பொறுப்பில் குழந்தை உள்ளது. அது அங்கேயே இருக்கலாம். தந்தை மற்றும் அவரது வழி தாத்தா, பாட்டி ஆகியோர் வரும் 21ம் தேதி முதல் மாதந்தோறும் முதலாவது, மூன்றவாது சனிக்கிழமைகளில் குழந்தையை பார்க்க அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.