ADDED : பிப் 15, 2025 01:52 AM

புதுச்சேரி: ஒன்றாம் வகுப்பு மாணவியிடம் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்து, பள்ளியை பொதுமக்கள் சூறையாடி, ஆசிரியரை விரட்டி, விரட்டி அடித்தனர். கடலுார் சாலையில் 5 மணி நேரம் மறியல் நடந்தது. பள்ளியை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.
புதுச்சேரி, தவளக்குப்பம், நல்லவாடு சாலை, தானாம்பாளையத்தில் செயின்ட் ஜோசப் தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமியிடம், அப்பள்ளி ஆசிரியர் மணிகண்டன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, சிறுமி பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் கிராம மக்களுடன் சிறுமியை அழைத்து வந்து பள்ளியில் விசாரித்தனர். சிறுமி, மணிகண்டனை அடையாளம் காட்டினார். பள்ளி நிர்வாகம் அலட்சியப்படுத்தியது. இதனால் நிர்வாகத்தை கண்டித்து, பள்ளியை நேற்று மாலை முற்றுகையிட்டனர். ஆசிரியர் மணிகண்டனை, போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து அழைத்து செல்ல முயன்றபோது, அவரை பொதுமக்கள் விரட்டி, விரட்டி தாக்கினர். சிறுமியின் பெற்றோர், உறவினர்களை போலீசார் தாக்கினர்.
இதில், ஆத்திரமடைந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர்.
கடலுார் - புதுச்சேரி சாலையில் மாலை, 5:00 மணி முதல் தொடர்ந்து மறியல் நடந்தது. இரு புறத்திலும் 5 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன. கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், ''குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியை உடனடியாக மூடி சீல் வைக்கப்படும்,'' என்றார்.